வீணாக கடலில் கலக்கிறது காவிரி நீர் டெல்டாவில் காய்ந்து கிடக்கும் 3,753 குளம், ஏரிகள்

* உரிய காலத்தில் தூர்வாராததே காரணம் * 5 லட்சம் ஏக்கரில் சாகுபடி பாதிப்பு * விவசாயிகள் குற்றச்சாட்டு

திருச்சி: திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகை,  திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 3,753 குளங்கள், ஏரிகள் தூர்வாராததால் நிரம்பாமல் 10ஆயிரம் கனஅடி நீர் வீணாக கடலில் கலக்கிறது. இதனால் 5 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி  பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு சரியான காலத்தில் மராமத்து பணி, தூர்வாராதது போன்றவையே காரணங்கள் என்று விவசாயிகள் குற்றம்சாட்டினர்.டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 13ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. ஆரம்பத்தில் 10,000 கனஅடி திறக்கப்பட்டு வந்தது. அதை 25 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தால்தான் கடைமடைவரை தண்ணீர் பாயும் என்று  விவசாயிகள் அபயக்குரல் எழுப்பியும் அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை. பின்னர் கர்நாடகாவில் மீண்டும் கனமழை பெய்து கே.ஆர்.எஸ், கபினி அணைகளில் உபரிநீர் திறக்கப்பட்ட தகவல் கிடைத்ததும் நீர்திறப்பு 18 ஆயிரம் கனஅடியாக  அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், மேட்டூர் அணைக்கு கடந்த 7ம் தேதி திடீரென நீர் வரத்து விநாடிக்கு 73 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால், அன்று மதியமே மேட்டூர் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதையடுத்து உபரி  நீர் காவிரியில் திறக்கப்பட்டது.  மேட்டூரில் இருந்து வரும் தண்ணீர் கரூர் மாயனூர் கதவணையில் இருந்து 52,200 கனஅடி நீர் நேற்று திறக்கப்பட்டது. இந்த நீர் முக்கொம்பு வந்து அங்கிருந்து காவிரியில் 32,400 கனஅடியும், கொள்ளிடத்துக்கு 18,400 கனஅடியும் திறக்கப்படுகிறது.  கதவணையில் இருந்து முக்கொம்புக்கு வருவதற்கு முன்னதாகவே காவிரி ஆறு, பெட்டவாய்த்தலை அருகே உய்யகொண்டான் வாய்க்கால் என அழைக்கப்பட்டு அங்கிருந்து பிரிந்து அணலை, கோப்பு, எட்டரை, சோமரசம்பேட்டை, புத்தூர்  ஆறுகண், குழுமிக்கரை, திருவெறும்பூர், காட்டூர், வல்லம் வரை செல்கிறது. அதுபோல் புலிவலம் பகுதியில் காவிரி நீர் பிரிந்து கொடிங்கால் வாய்க்கால் வழியே சென்று குழுமணி, பேரூர், மருதாண்டகுறிச்சி வழியே குடமுருட்டி சென்று  காவிரியில் கலக்கிறது. இதில் கொடியாலம், பொய்யாமணி, கொடிங்கால், அதவத்தூர் ஆகிய பகுதிகளில் குளங்கள் மற்றும் ஏரிகள் தூர்வாரப்படாததால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். கல்லணையில் இருந்து  கொள்ளிடம், காவிரி, ெவண்ணாறு, கல்லணை கால்வாய் என 4 ஆறாக பிரிந்து செல்கிறது. இதில் கல்லணையில் இருந்து காவிரியில் 9548 கனஅடி, கொள்ளிடத்தில் 11,045 கனஅடியும், வெண்ணாறில் 9022கனஅடியும், கல்லணை கால்வாயில்  3004 கனஅடி நீரும் திறக்கப்படுகிறது.

 இதில் பாசனத்திற்கு பயன்படும் கல்லணை கால்வாய் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி பகுதி வழியே சென்று கடலில் கலக்கிறது. இந்த கல்லணை கால்வாயில் திறக்கப்படும் நீரானது ஏரி,  குளங்களை நிரப்பியவாறு செல்லும். ஆனால் ஏரி, குளங்கள் தூர்வாரப்படாததாலும், ஆக்கிரமிப்பில் உள்ளதாலும் அவற்றில் நீர் நிரம்பாமல் உள்ளது. அதேநேரத்தில் கடைமடையின் பெரும்பகுதிக்கு இன்னும் தண்ணீர் சென்றடையவில்லை.  இதனால் விவசாயிகள் சம்பா சாகுபடி பணியை தொடங்க முடியாமல் உள்ளனர். கல்லணையில் இருந்து திறக்கப்படும் நீர் மற்ெறாரு ஆறான ெவண்ணாறு நீடாமங்கலம், திருவாரூர், நாகை மாவட்டம் வழியே 50க்கும் மேற்பட்ட கிளை ஆறுகள், வாய்க்கால்களை நிரப்பி செல்லும். ஆனால் இந்த பகுதியிலும் தூர்வாராததால்  தண்ணீர் செல்லாமல் உள்ளது. இதனால் நாகூர் அருகே வெட்டாறு  நீர்தேக்கம் வீணாக கடலில் கலந்து வருகிறது.  இதேபோல், கொள்ளிடம் ஆற்றில் லால்குடி, புள்ளம்பாடி வழியே  அணைக்கரை கீழணைக்கு 11 ஆயிரம் கன அடி   தண்ணீர்  திறந்துவிடப்பட்டது.  கீழணை பாலம் ஏற்கனவே பழுதடைந்துள்ளதால்   தண்ணீர் தேக்கி வைக்க முடியாமல் நேற்று முன் தினம்  இரவு 12   மணி முதல் 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் எவ்வித பாசனத்திற்கும் பயன்படாமல் கடலில் கலக்கிறது. குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 724 ஏரி, குளங்கள் தூர்வாரப்படாமல் உள்ளதால் தண்ணீரை சேமிக்க முடியவில்லை. புதுக்கோட்டை மாவட்டத்தில் 168 ஏரி, குளங்கள் தூர்வாரப்படவில்லை. இதுபோன்று திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர்,  புதுக்கோட்டை, நாகையில் 3,753 குளங்கள், ஏரிகள் தூர்வாரப்படவில்லை என பொதுப்பணிதுறை சார்பில் தெரிவிக்கப்படுகிறது. ஒரு பக்கம் கடைமடைக்கு தண்ணீர் வரவில்லை. இன்னொரு பக்கம் கடலில் வீணாக தண்ணீர் கலந்து வருகிறது.  உரிய காலத்தில் மராமத்து பணிகள் செய்யப்படவில்லை. இப்போதுதான் அவசர கதியில் தூர்வாரும் பணி, மராமத்து பணிகள் நடக்கிறது. நீர் மேலாண் திட்டம் தோல்வி அடைந்து விட்டதையே இது காட்டுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி  உள்ளனர்.

இதுகுறித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர்  அய்யாகண்ணு கூறுகையில்,  ‘‘தற்போது  காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீரானது நிலத்தடி நீரை சேமித்து வைப்பதற்கு கூட  போதுமானதாக இருக்காது.  மேலும் ஆறு, ஏரி, குளங்கள் தூர்வாரப்படாததால் நீரை  சேமித்து வைக்க முடியவில்லை. இதனால் கடந்த 15 ஆண்டுக்கு முன் டெல்டாவில்  தஞ்சாவூர், திருவாரூர், நாகையில் 16 லட்சம் ஏக்கர் அளவில் சாகுபடி  செய்யப்பட்டது. ஆனால் கடும்  வறட்சி, போதிய நீர் இல்லாததால் 4 லட்சம் ஏக்கர் அளவுக்கு குறைந்துவிட்டது. திருச்சி  மாவட்டத்தில் 17  வாய்க்கால்கள் உள்ளது. இதில்  முக்கிய வாய்க்கால்களான முசிறி மேட்டு வாய்க்கால்,  பல்லவாய்க்கால்,  காட்டுவாய்க்கால்,  கொடுந்தரை வாய்க்கால் புதிய கட்டளை  மேட்டு வாய்க்கால்  ஆகியவற்றில் தண்ணீரே செல்லவில்லை’’ என்று வேதனையுடன் தெரிவித்தார்.கடைமடையின் பெரும்பகுதிக்கு இன்னும் தண்ணீர் சென்றடையவில்லை. இதனால் விவசாயிகள் சம்பா சாகுபடி பணியை தொடங்க முடியாமல் உள்ளனர்

5 லட்சம் ஏக்கர் பாதிப்பு

தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீர் சரியான முறையில் கிடைத்திருந்தால் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் தற்போதைய நிலவரப்படி 10 லட்சம் ஏக்கர் அளவில் சாகுபடி செய்ய வேண்டும். ஆனால்,  தண்ணீர் போதிய அளவில் கடைமடை பகுதி வரை செல்லாததாலும், தண்ணீர் கிடைக்காததால் நாற்று நடும் பணி துவங்கப்படாததால் சுமார் 5 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ளது.

Related Stories: