அதிமுக ஆட்சியில் வந்துள்ள முதலீடு குறித்து முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா?: மு.க.ஸ்டாலின் சவால்

சென்னை: அதிமுக ஆட்சியில் பெறப்பட்டுள்ள முதலீடு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா என்று மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:   வெளிநாடுகளின் முதலீடுகளைப் பெறப் போகிறோம் என்று சொல்லி வீராப்புடன் சென்று வெறுங்கையுடன் திரும்பியிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பயணம் மன ரீதியாக ஏற்படுத்தியுள்ள கோணலால்,  விரக்தியின் உச்சத்திற்கே  சென்று, “ஸ்டாலின் தான் நினைத்ததை நடத்த முடியாத காரணத்தால் என் மீது  எரிச்சலும், பொறாமையும் கொண்டு பேசி வருகிறார்” எனப் பேட்டியளித்திருக்கிறார். இது ‘பாடத் தெரியாமல் பக்க வாத்தியத்தில் குறை’ கூறியது போன்ற  பைத்தியக்காரத்தனமானது.
 13 நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு வந்திருக்கும் முதல்வருக்கு ‘கட்சி நிதி’’யிலிருந்து கொடுப்பது போல் விளம்பரங்களை அரசு நிதியிலிருந்து கொடுத்திருந்ததைப் பார்த்த மயக்கத்தில் என் மீது பாய்ந்திருக்கிறார். அரசுப்  பணத்தில் இத்தகைய விளம்பரங்களை வெளியிடுவது நிதி ஒழுங்கீனம் என்பதை உடன் சென்ற தலைமைச் செயலாளர் உணர்த்தியிருக்க வேண்டும்.

 தமிழகத்தில் இன்றைக்குள்ள தொழிற்சாலைகளும், மாநிலத்திற்கு கிடைத்த நேரடி அந்நிய முதலீடுகளும் திமுக ஆட்சியில் பெறப்பட்டவை என்ற அடிப்படை விவரத்தைக் கூட ‘விளம்பர மோகத்தில்’ அவர் மறந்திருக்கிறார் அல்லது  மறைத்திருக்கிறார். அவருடன் சென்ற தலைமைச் செயலாளரே துபாயில்,  திமுக ஆட்சியில் கிடைத்த அந்நிய முதலீடுகளையும் சேர்த்து அங்குள்ள தொழிலதிபர்களிடம் தமிழகத்தின் பெருமையைச் சுட்டிக்காட்டி முதலீடு கோரியிருக்கின்ற  நிலையிலும், பக்கத்தில் இருந்த பழனிசாமிக்கு திமுக ஆட்சியில் தமிழகம் கண்ட தொழில் வளர்ச்சி தெரியாமலும் புரியாமலும் விமான நிலையத்தில் பேட்டி அளித்திருக்கிறார்.திமுக ஆட்சியில் 2006 முதல் 2010 மார்ச் வரை மட்டும் 46,091 கோடி ரூபாய் அந்நிய முதலீடுகள் பெறப்பட்டு 2.21 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டது. முதல்வர் பொறுப்பிலிருந்த தலைவர் கலைஞர், தொழிற்துறை அமைச்சராக  என் நிர்வாகத்திலும், ‘’வெளிப்படையாகவும், விரைவாகவும் முடிவெடுத்தல்’’, ‘’ஒற்றைச் சாளர முறையில் தொழிற்சாலைகளுக்கு  அனுமதியளித்தல்’’ உள்ளிட்ட ‘’கமிஷன் இல்லாத அனுமதிகள்’’ மூலம் தொழிற்சாலைகள் தமிழகத்தில்  பெருகின.  இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலீட்டாளர்கள் அதிகம் விரும்பித் தேர்வு செய்து முதலீடு செய்யும் முதன்மை மாநிலமாக திமுக ஆட்சியில் தான் விளங்கியது என்ற அடிப்படை விவரம் கூட  அவசரத்திலும்,  அரசியல் விபத்தின்  காரணமாகவும், இரு கைகள் இரு கால்கள் ஆக நான்கு கால்களால் தவழ்ந்து சென்று, முதல்வரான எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவில்லை என்பது பரிதாபம் தான்.

 இப்போது போட்டுள்ளதாகக் கூறப்படும் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கதி என்ன ஆகுமோ என்றும் தெரியவில்லை. தமிழகத்துக்கு ‘இவ்வளவு முதலீடுகள் வந்துள்ளன’ என்று சட்டமன்றத்தில் ஒரு வெள்ளையறிக்கை வைக்கக் கூடத்  துப்பில்லாத முதல்வர், இன்றைக்கு ‘எனக்கு ஏதோ போட்டி பொறாமை’’ என்று பேட்டியளிப்பது,  வெளிநாட்டுப் பயணத்தில் அவருக்கு ஏற்பட்ட மிகப்பெரிய ஏமாற்றத்தின் அல்லது படுதோல்வி மனப்பானமையின் வெளிப்பாடு மட்டுமல்ல அவர்  வெளிநாட்டிற்கு முதலீடு திரட்டப் போகவில்லை என்பதைக் காட்டுகிறது.அரசு நிதியை சொந்த நிதிபோல் பயன்படுத்தி விட்டு திரும்பியிருக்கும் அமைச்சர்களும், முதல்வரும் நிச்சயம் ஒரு நாள் தமிழக மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நேரம் வரும். அப்போது, இப்படி வாயளந்து விட்டதற்கெல்லாம் மக்கள்  மன்றத்தில் விடை சொல்லியாக வேண்டும். ஆகவே, இப்போதும் சொல்கிறேன், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இருந்தால், “அதிமுக ஆட்சியில் இதுவரை போடப்பட்டுள்ள 443 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி எத்தனைக் கோடி  ரூபாய்க்கு முதலீடுகள் பெறப்பட்டுள்ளன. அந்த முதலீடுகள் மூலம் தொடங்கப்பட்டு செயல்படும் தொழிற் நிறுவனங்கள் எத்தனை.

அந்நிறுவனங்கள் மூலம் எத்தனை ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கித்தரப்பட்டன  என்பதையெல்லாம் விரிவான வெள்ளை அறிக்கையாக உருவாக்கி, இதோ பிடியுங்கள் நீங்கள் கேட்கும் வெள்ளை அறிக்கை” என்று வெளியிடத் தயாரா? அப்படி உண்மைகளை வெளியிட்ட ஒரு வாரத்தில் முதல்வருக்கு திமுக சார்பில் ‘’பாராட்டு விழா’’ நடத்தத் தயாராக இருக்கிறேன். என் சவாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொள்ளத் தயாரா?. இரண்டு நாட்களில் தமிழக  மக்களுக்குப் பதில் வேண்டும். இல்லாவிட்டால், முதல்வரின் வெளிநாடுகள் பயணம் மர்மங்கள் நிறைந்தது என்று ஊர் முழுவதும் பேசிக் கொள்வது உண்மைதான் என்று உறுதியாகிவிடும். சிலரை பலநாள் ஏமாற்றலாம். பலரைச் சிலநாள்  ஏமாற்றலாம். எல்லோரையும் எல்லா நாட்களும் ஏமாற்றிவிட முடியாது என்பதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி புரிந்து கொள்ள வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஓணம் திருநாள் வாழ்த்து
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  ஓணம் பண்டிகையைச் சிறப்பாக கொண்டாடிட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக கலைஞர் முதல்வராக இருந்தபோது, நாகர்கோவில், கோவை, நீலகிரி, சென்னை ஆகிய பகுதிகளில் வாழும் கேரள மக்களுக்கு ‘சிறப்பு அரசு விடுமுறை’  அளித்ததை இந்த நேரத்தில் நினைவூட்டி, மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும்  இனிய ‘ஓணம் திருநாள்’ வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : White House ,AIADMK ,MK Stalin , Regarding , AIADMK regime, White Paper, MK Stalin's challenge
× RELATED முறைப்படி அறிவித்தார் ஜனாதிபதி:...