நான் வெளியே வந்தால் எல்லாம் சரியாகிவிடும்: நிர்வாகிகளுக்கு சசிகலா ஆறுதல்

சென்னை: நான் வெளியே வந்தால் கட்சியில் உள்ள அனைத்து பிரச்னைகளும் சரியாகிவிடும். அதுவரையில் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என தன்னை சந்தித்த நிர்வாகிகளிடம் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா ஆறுதல்  கூறியதாக அக்கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. அமமுகவிற்கு பொதுச்செயலாளராக டிடிவி.தினகரன் பொறுப்பேற்ற பிறகு அவரின் நடவடிக்கைகளுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதேபோல், தேர்தல் தோல்விக்கு பிறகு கட்சியில் இருந்து ஏராளமானோர் மாற்று கட்சியில்  இணைந்தனர். மாவட்ட செயலாளர்கள் பலர் தங்களின் மாவட்டங்களில் நடக்கும் பிரச்னைகளை கட்சி தலைமையிடம் தெரிவிக்க முற்பட்ட போதும் அது நிராகரிக்கப்பட்டதாகவே இருந்தது. தொடர்ந்து, தலைமையின் மேல் உள்ள அதிருப்தி  காரணமாக இசக்கி சுப்பையா, தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் கட்சியில் இருந்து வெளியேறினர். இந்நிலையில், கட்சியின் செய்தி தொடர்பாளரும், சசிகலாவின் ஆதரவாளருமான புகழேந்தி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கோவை மாவட்ட நிர்வாகிகளை நேரில் சந்தித்த வீடியோ ஒன்று வெளியானது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில்  வெளியானதை அடுத்து புகழேந்தி கட்சியில் இருந்து வெளியேற உள்ளதாகவும் கூறப்பட்டது. இதை தொடர்ந்து கட்சியில் உள்ள பலரும் தினகரன் மேல் உள்ள அதிருப்தி காரணமாக தங்களின் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளதாக  கூறப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் சந்தித்து கட்சியின் தலைமை மேல் உள்ள அதிருப்தியை தெரிவித்துள்ளனர். அப்போது, உங்களுக்காகவே நாங்கள் அமைதியாக  இருக்கிறோம். எங்களை சந்திக்க டிடிவி.தினகரன் மறுக்கிறார். குறைகளை கேட்க மறுக்கிறார். இதனால், கட்சி பணிகள் அனைத்தும் முடங்கிபோய் உள்ளது. தன்னுடைய ஆதரவாளர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, கட்சியில் உள்ள  மற்றவர்களை அவர் நிராகரிக்கிறார் என்று கூறியுள்ளனர். நிர்வாகிகளின் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அமைதியாக கேட்ட சசிகலா, ‘நான் ஓரிரு மாதத்தில் சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்புள்ளது. அதற்கான பணிகள் நடந்து வருகிறது. நான் வெளியே வந்தால் கட்சி பிரச்னைகள்  அனைத்திற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும். எனவே, அனைவரும் அதுவரையில் அமைதியாக இருங்கள்’ என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து, குறிப்பிட்ட நிர்வாகிகள் அனைவரும் சசிகலாவின் வருகைக்காக அமைதியுடன்  காத்திருப்பதாக அமமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேபோல், தினகரன் மேல் உள்ள அதிருப்தியை சசிகலாவிடம் மனுவாக அளிக்கவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, சசிகலா வெளியே வந்த உடன் கட்சியில் மிகப்பெரிய மாற்றங்கள் உண்டாகும் எனவும் அக்கட்சி வட்டாரங்கள்  தெரிவித்துள்ளன.

Related Stories: