அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் முடிந்து முதல்வர் சென்னை திரும்பினார்: விமான நிலையம் வராமல் ஓபிஎஸ் புறக்கணிப்பு

சென்னை: அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் ஆகிய நாடுகளில் 14 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் எடப்பாடி நேற்று அதிகாலை சென்னை திரும்பினார். முதல்வரை வரவேற்க துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  விமான நிலையம் செல்லாமல் புறக்கணித்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு 14 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணமாக கடந்த மாதம் 28ம் தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் லண்டன் புறப்பட்டு சென்றார். அவருடன்  முதல்வரின் செயலாளர்கள், பாதுகாவலர்கள் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோரும் சென்றனர். மேலும், தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய் மற்றும் தகவல்  தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் அந்தந்த துறை செயலாளர்களுடன் சென்றிருந்தனர்.அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அதிகாலை சென்னை திரும்பினார். 14 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அதிகாலை சென்னை திரும்பிய  முதல்வர் எடப்பாடிக்கு திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள், தம்பிதுரை உள்ளிட்ட அதிமுக முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர். அமைச்சர்கள்  அவருக்கு பொன்னாடை மற்றும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்கள்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளிநாடு சென்று திரும்பிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க விமான நிலையம் செல்லாமல் புறக்கணித்தார். அதேபோல, அவரது ஆதரவாளர்களான பாண்டியராஜன் உள்ளிட்டோரும்  செல்லவில்லை என்று கூறப்படுகிறது. பின்னர், காலை 11 மணிக்கு முதல்வரின் வீட்டுக்குச் சென்ற ஓ.பன்னீர்செல்வம் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.பின்னர் முதல்வர், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டிற்கு அதிக அளவில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு கடந்த மாதம் 28ம் தேதி முதல் 9ம் தேதி வரை அரசு முறை பயணம் மேற்கொண்டேன். டெங்கு, மலேரியா போன்ற  நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களை கட்டுப்படுத்த கையாளும் வழிமுறைகள் தொடர்பாக லண்டன் ஸ்கூல் ஆப் அர்ஜுன் மற்றும் டிராபிகல் மெடிசின் நிறுவனத்துடன் நோக்க அறிக்கை கையெழுத்தானது. அத்துடன் விமான ஆம்புலன்ஸ்  சேவையின் செயல்பாடுகளை பார்வையிட்டு அந்நிறுவனம் பின்பற்றும் நுட்பமான வழிமுறைகளை தமிழ்நாட்டில் உள்ள 108 ஆம்புலன்ஸ் ஊர்திகளில் நடைமுறைப்படுத்தவும் உள்ளோம். சர்வதேச திறன் மேம்பாடு நிறுவனத்துடன் தமிழ்நாட்டில்  கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை நிறுவிட கிங்ஸ் மருத்துவமனையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் `யாதும் ஊரே’ திட்டத்தை தொடங்கி வைத்தேன். சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள டெஸ்லா பேட்டரி கார் நிறுவனத்தை பார்வையிட்டு தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு  விடுத்துள்ளோம். நியூயார்க் நகரில் நடந்த முதலீட்டாளர்கள் கூட்டத்தில் ரூபாய் 2 ஆயிரத்து 780 கோடி முதலீட்டில் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அடுத்து சான் ஹீசே நகரில்  முதலீட்டாளர்கள்  கூட்டத்தில் ரூ.2,300 கோடிக்கு தமிழகத்தில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழகத்தில் தொடங்கப்படும் புதுத்தொழிலுக்கு தேவையான நிதியில் 10 சதவீதத்தை தமிழக அரசு வழங்கும் எனவும் அதற்காக 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். 3 நாடுகள் சுற்றுப்பயணத்தின்போது 41 தொழில் நிறுவனங்களுடன்  ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதன் மூலம் ரூ.8,830 கோடி அளவுக்கு முதலீட்டை தமிழகத்திற்கு ஈர்த்துள்ளோம். இதன்மூலம் 37,300 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.அடுத்ததாக நீர்பாசன முறைகளை அரிய இஸ்ரேல் நாட்டுக்கு செல்ல திட்டமிட்டு இருக்கிறேன்.முதல்வர் எடப்பாடி, நேற்று மாலை உடனடியாக சேலம் புறப்பட்டு சென்றார். நேற்று மாலை 5.10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக சேலம் செல்கிறார்.

போக்குவரத்து நெரிசல்
இரண்டு வாரம் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு சென்னை திரும்பிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அதிகாலை சென்னை வந்தார். அவர் சென்னை திரும்புவதையொட்டி வரவேற்க அதிமுக கட்சியினர் ஏராளமானோர்  விமான நிலையத்துக்கு வாகனங்களில் வந்திருந்தனர். இதனால் சென்னை புதிய விமான நிலையத்திலிருந்து பழைய விமான நிலையம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 500 மீட்டர் இடைவெளி உள்ள இந்த தூரத்தை கடக்க அரை  மணி நேரம் ஆனது. அதுமட்டுமில்லாமல் விமான நிலையம் செல்லும் சாலையின் நடுவே வாகனங்கள் ஆக்கிரமித்து நின்றிருந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வெளிநாடுகளுக்கு செல்ல விமான நிலையம்  வந்தவர்களும் பாதிக்கப்பட்டனர்.

Tags : tour ,Chennai ,US ,UK ,airport ,OBS ,Dubai , US, UK ,Dubai CM, Chennai,airport
× RELATED சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டம் எதிரொலி:...