சுவரில் ரத்தத்தில் எழுதி வைத்து விட்டு மாயமான பெண் நீதிமன்றத்தில் ஆஜர்: நீதிபதியிடம் கண்ணீர்; பரபரப்பு தகவல்

சேலம்: சேலத்தில் வீட்டு சுவரில் ரத்தத்தில் எழுதி வைத்து விட்டு மாயமான ஜவுளி கடைக்காரரின் மனைவியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். சேலம் சின்னதிருப்பதி சந்திராகார்டன் பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். இவர் தாதகாப்பட்டியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி தமிழ்செல்வி (35). இவர் கடந்த மாதம் 27ம் தேதி தனது வீட்டின் அறையில் உள்ள சுவரில் விமல் ஆட்கள்; காப்பாத்துங்க ஹரி’’ என ரத்தத்தில் எழுதி வைத்து விட்டு தனது 2வது மகளுடன் மாயமானார். இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இவர்கள் கொலை செய்யப்பட்டனரா? அல்லது கடத்தி செல்லப்பட்டனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், தமிழ்செல்வி மகளுடன் உயிருடன் இருப்பதும், கோவையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருப்பதும் தெரியவந்தது.

Advertising
Advertising

இதற்கிடையே நேற்று முன்தினம் கன்னங்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் திடீரென தமிழ்செல்வி தனது மகளுடன் ஆஜரானார். போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்: தமிழ்செல்வியின் முதல் கணவர் இறந்து விட்டார். இந்த தம்பதிக்கு 2 மகள்கள். கணவர் இறந்த பிறகு ஹரிகிருஷ்ணனை தமிழ்செல்வி 2வதாக திருமணம் செய்துள்ளார். தமிழ்செல்வியின் மூத்த மகளை, ஹரிகிருஷ்ணன் தனது கடையில் வேலை செய்யும் விமலுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார். இதற்கு தமிழ்செல்வி சம்மதிக்கவில்லை. இதனால் அவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மனவேதனையில் இருந்த தமிழ்செல்வி, கணவரை பழிவாங்குவதற்காக வீட்டின் அறையில் உள்ள சுவரில் ரத்தத்தினால் எழுதி விட்டு மகளுடன் மாயமானார். மேலும் என்னை ஹரிகிருஷ்ணன் சந்தேகப்பட்டு அடிக்கடி திட்டி வந்தார்.

இதனால் அவருடன் சேர்ந்து வாழ பிடிக்கவில்லை. மகளுடன் தனியாக சென்று விடுகிறேன்’ என்று தமிழ்செல்வி கூறியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்செல்வியை கன்னங்குறிச்சி போலீசார் நேற்று சேலம் 1வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதித்துறை நடுவர் செந்தில்குமார், அவரிடம் விசாரணை நடத்தினார். அப்போது தமிழ்செல்வி, தனது கணவர் தொடர்ந்து கொடுமை செய்து வந்ததால், அவரிடம் இருந்து வெளியேறினேன் என கண்ணீர் மல்க கூறினார். இதனை நீதிபதி பதிவு செய்து கொண்டார். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

Related Stories: