ஆட்டை திருடி போலீசாருக்கே கறியாக வெட்டி விற்ற ஆசாமி

தேனி: தேனி அருகே வீரபாண்டியை சேர்ந்தவர் முத்துச்சாமி. இவர் பொன்னுப்பிள்ளை என்பவரின் தோட்டத்தில் ஆட்டுக்கிடை போட்டுள்ளார். கடந்த வாரம் இவரது ஆடு ஒன்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து வீரபாண்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் வீரபாண்டி போலீஸ் குடியிருப்பு முன் முத்துச்சாமி சென்று கொண்டிருந்தார். அப்போது போலீஸ் குடியிருப்பு முன் உள்ள இறைச்சிக்கடையில், திருடு போன இவரது ஆட்டின் தலையும், தோலும் இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த முத்துச்சாமி, உடனே இறைச்சிக்கடை நடத்தி வந்த சின்னத்தம்பியை(28) பிடித்து வீரபாண்டி போலீசில் ஒப்படைத்தார்.

Advertising
Advertising

அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் முத்துச்சாமியின் ஆட்டை திருடியதை ஒப்புக்கொண்டார். மேலும் அந்த ஆட்டை வெட்டி போலீஸ் குடியிருப்பில் உள்ளவர்களுக்கே இறைச்சியாக விற்றதாகவும் தெரிவித்தார். இதை கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.  உடனே  அவரை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘வீரபாண்டி போலீஸ் குடியிருப்பு முன் கறிக்கடை வைத்துள்ள சின்னத்தம்பியிடம்தான் நாங்கள் இறைச்சி வாங்குவது வழக்கம். இவர் ஆட்டை திருடி வெட்டி அதை எங்களுக்கே விற்றது இப்போதுதான் தெரிய வந்துள்ளது’’ என்றனர்.

Related Stories: