5 லட்சத்துக்கு விரும்பிய பல்கலையில் முனைவர் பட்டம்: செல்போன் அழைப்பால் கல்வியாளர்கள் கடும் அதிர்ச்சி

சேலம்: தமிழகத்தில் 5 லட்சத்துக்கு விரும்பிய பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டம் பெற்றுத்தருவதாக செல்போனில் அழைப்பு விடுத்து வருவது கல்வியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். மத்திய அல்லது மாநில அரசு நடத்தும் தகுதித்தேர்வில் ேதர்ச்சி (நெட், செட்), அல்லது முனைவர் பட்டம் (பிஎச்டி) உதவி பேராசிரியர் பணிக்கான கல்வித்தகுதியாகும்.  சமீபத்தில், மாநிலம் முழுவதும் காலியாக உள்ள 2,340 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், திடீரென விண்ணப்ப பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி முனைவர் பட்டத்துடன் பணி நியமனம் பெற்றுத்தர ஒரு கும்பல் உயர் கல்வித்துறை அலுவலகங்களில் முகாமிட்டுள்ளது.

Advertising
Advertising

இது ஒருபுறம் இருக்க, 5 லட்சம் கொடுத்தால் போதும், தமிழகத்தின் எந்த பல்கலைக்கழகத்திலும் விரும்பிய பிரிவுகளில் முனைவர் பட்டம் பெற்றுத்தருவதாக, டெலிபோன் மூலம் அழைப்பு விடுத்து வருகின்றனர். இருதினங்களுக்கு முன்பு தர்மபுரியைச் சேர்ந்த வாலிபருக்கு வந்த அழைப்பில் பேசிய இளம்பெண், தான் சென்னை சேலையூரிலிருந்து பேசுவதாகவும், பிஎச்டி அட்மிஷன் பெற்றுத்தருவதாகவும் கூறுகிறார். தொடர்ந்து, பாரதிதாசன், பாரதியார் என தமிழகத்தில் எந்த பல்கலைக்கழகத்தில் வேண்டுமானாலும், பிஎச்டி பட்டம் பெற்றுத்தருகிறோம். உங்களுக்கு விரும்பிய பிரிவில் தலைப்பை கூறினாலோ, அல்லது நாங்கள் வழங்கும் தலைப்பை தேர்வு செய்து தெரிவித்தாலோ போதும். ஆய்வுக்கட்டுரைகளை நாங்களே தயார் செய்து, அதனை வெளியிட்டு முனைவர் பட்டம் பெற்றுத்தருகிறோம். இதற்கு 5 முதல் 6 லட்சம் வரை வழங்கினால் மட்டும் போதும் என அழைப்பு விடுக்கிறார். இந்த உரையாடல் தற்போது வாட்ஸ் அப்பில் வேகமாக பரவி வருகிறது.

இது கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: முனைவர் பட்டம் என்பது பலரது லட்சிய கனவுகளில் ஒன்று. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அதன் தரம் குறைந்து வருகிறது. தங்களுக்கு விருப்பமான பிரிவை தேர்வு செய்து, தகுதிவாய்ந்த பேராசிரியரை வழிகாட்டியாகக்கொண்டு, ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். பின்னர், வழிகாட்டி பேராசிரியர் மற்றும் கல்வியாளர்களின் பரிசீலனைகளை கடந்து, ஆய்வின் முடிவுகளை வெளியிட வேண்டும். குறைந்தது 3 முதல் அதிக பட்சம் 6 ஆண்டுகள் வரை கூட, பிஎச்டி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால்,சமீபகாலமாக கல்வி வழிகாட்டி மையங்கள் என்ற பெயரில் ஆங்காங்கே  தொடங்கப்பட்டுள்ள நிறுவனங்கள், அவர்களாகவே போன் செய்து, எம்பில், பிஎச்டி என ஆசைைய தூண்டி பணம் பறிக்கும் நடவடிக்ைககளை மேற்கொண்டு வருகின்றன.

இறுதியில் பெயர் தெரியாத பல்கலைக்கழக சான்றிதழ்களை வழங்கிவிடுகின்றன. இதற்கு பேராசிரியர்கள் பலரும் துணையாக இருந்து வருவதுதான் வேதனை. பணம் கொடுத்து வாங்கும் சான்றிதழை வைத்து பணியில் சேருபவர்களால், தரமான மாணவர்களை எவ்வாறு உருவாக்க முடியும்? எனவே மாநிலம் முழுவதும் உள்ள கல்வி வழிகாட்டி மையங்களை முறைப்படுத்த வேண்டும். இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: