ஐக்கிய அரபு எமிரேட்டில் தவிக்கும் 200 இந்திய தொழிலாளர்கள் சம்பள பாக்கி பெறுகிறார்கள் : நாடு திரும்ப ஏற்பாடு

துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்சில் வேலை செய்யும் இந்திய தொழிலாளர்கள் 200 பேர் சம்பள பாக்கியை பெற்றுக் கொண்டு நாடு திரும்ப உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, பிலிப்பைன்ஸ் மற்றும் எகிப்தை சேர்ந்த சுமார் 300 தொழிலாளர்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள ஆல் வாசிதா எமிரேட்ஸ் கேட்டரிங் சர்வீஸ் என்ற நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் கடந்த சில மாதங்களாக சம்பளத்தை பெறவில்லை. இந்நிலையில், இந்த தொழிலாளர்கள் சம்பள பாக்கியை பெறுவார்கள் என இந்திய  தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பத்திரிக்கையில் இந்திய தூதரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், ‘சம்பள பாக்கி பிரச்னை விரைவில் தீர்க்கப்படும். தொழிலாளர்கள் அடுத்த வாரம் அல்லது விரைவில் அவர்களுக்கு சேர வேண்டிய சம்பள பாக்கியை பெறுவார்கள். மேலும் விமான டிக்கெட், விசாவை ரத்து செய்வது உள்ளிட்டவையும் முடித்து விரைவில் நாடு திரும்புவார்கள்,’ என்று கூறப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் கூறுகையில், ‘‘இந்திய தூதரக அறிவிப்பை அடுத்து எங்களுக்கு சற்று நிம்மதி கிடைத்துள்ளது. உண்பதற்கு உணவின்றி, செலவழிக்க பணமின்றி மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானோம். இந்திய தூதரகம் உறுதி அளித்ததை அடுத்து நம்பிக்கையோடு இருக்கிறோம். எங்கள் நம்பிக்கை உண்மையாக வேண்டும்,” என்றனர்.

Related Stories: