வாக்கெடுப்பில் மீண்டும் தோற்றதால் புதிய பிரக்சிட் ஒப்பந்தம்: நிர்பந்தத்தில் இங்கி. பிரதமர் : நாடாளுமன்ற முடக்கம் அமலுக்கு வந்தது

லண்டன்: முன்கூட்டியே பொதுத்தேர்தல் நடத்துவதற்கான வாக்கெடுப்பில் இங்கிலாந்து பிரதமர் போரில் ஜான்சன் மீண்டும் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, புதிய பிரக்சிட் ஒப்பந்தத்தை தயாரிப்பதற்கான நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகுவதற்கான பிரக்சிட் ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.  எந்த ஒப்பந்தமும் இல்லாமல் பிரக்சிட்டை நிறைவேற்றுவதில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் குறியாக இருக்கிறார். ஆனால், தற்போதுள்ள ஒப்பந்தத்திற்கு பதிலாக புதிதாக பிரக்சிட் ஒப்பந்தத்தை தயாரிக்க வேண்டுமெனவும், தவறினால் பிரக்சிட் காலக்கெடுவை 3 மாதத்திற்கு தாமதப்படுத்தக் கோரியும் எதிர்க்கட்சி சார்பில் கடந்த 4ம் தேதி மசோதா ஒன்று நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. இந்த மசோதா மீதான வாக்கெடுப்பில் பிரதமர் போரிஸ் தோல்வி அடைந்தார்.

இதே போல், நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு முன்கூட்டியே, அக்டோபர் 15-ம் தேதி தேர்தலை நடத்த வேண்டுமென்ற போரிசின் கோரிக்கையை எதிர்க்கட்சி எம்பிக்கள் நிராகரித்தனர். எனவே, இது தொடர்பாக பிரதமர் போரிஸ் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தீர்மானம் வெற்றி பெற 434 எம்பிக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், 293 பேர் மட்டுமே ஆதரவு அளித்து வாக்களித்தனர். இதனால், தீர்மானம் தோல்வி அடைந்தது. 303 பேர் வாக்களிக்கவில்லை.
Advertising
Advertising

இதன் காரணமாக, புதிய பிரக்சிட் ஒப்பந்தம் தயாரிக்க வேண்டும் அல்லது வரும் 31ம் தேதியுடன் முடிவடையும் பிரக்சிட் காலக்கெடுவை 3 மாதத்திற்கு பிரதமர் போரிஸ் ஒத்திவைக்க வேண்டும். இதற்காக அவருக்குள்ள ஒரே வாய்ப்பு வரும் 17ம் தேதி தொடங்கும் 2 நாள் ஐரோப்பிய கூட்டமைப்பு மாநாடு மட்டுமே. இதில் ஐரோப்பிய கூட்டமைப்பு தலைவர்களை சமாளித்து இங்கிலாந்துக்கு ஆதரவாக புதிய ஒப்பந்தம் தயாரிக்க வேண்டும். அல்லது கால அவகாசத்தை நீட்டிக்க அனுமதி பெற வேண்டும். ஒருவேளை எந்த ஒப்பந்தமும் இல்லாமல் வெளியேற வேண்டுமென்றால், அக்டோபர் 19ம் தேதிக்குள் எம்பிக்களை சரிகட்டி எந்த ஒப்பந்தமும் இல்லாமல் வெளியேற சம்மதிக்க வைக்க வேண்டும். இந்தநிலையில் போரிஸ் அரசின் கோரிக்கை படி, 5 வார காலத்திற்கு நாடாளுமன்றத்தை முடக்கும் நடைமுறை நேற்று அமலானது. நேற்று முதல் அக்டோபர் 14ம் தேதி வரை நாடாளுமன்றம் செயல்படாது. இது குறித்து பிரதமர் போரிஸ் அளித்த பேட்டியில், ‘‘இக்கட்டான நிலைக்கு எங்களை தள்ளிய எதிர்க்கட்சிகள் ஓடி ஒளிய முடியாது. நிச்சயம் அவர்களுக்கு தோல்வியே மிஞ்சும். புதிய பிரக்சிட் ஒப்பந்தத்தை கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்,’’ என்றார்.

Related Stories: