தனிப்பெரும் சுவை கொண்ட திருவில்லிபுத்தூர் பால்கோவா பெற்றது புவிசார் குறியீடு

திருவில்லிபுத்தூர்: உலக பிரசித்தி பெற்ற திருவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே பழநி பஞ்சாமிர்தம், மதுரை மல்லி, சுங்குடி சேலைகள், கொடைக்கானல் மலைப்பூண்டு, பத்தமடை பாய், காஞ்சிபுரம் பட்டு, பaவானி ஜமுக்காளம், தஞ்சாவூர் தட்டு, தஞ்சாவூர் ஓவியம், தஞ்சாவூர் வீணை, ஈரோடு மஞ்சள், மகாபலிபுரம் சிற்பங்கள், திண்டுக்கல் பூட்டு, காரைக்குடி செட்டிநாடு கண்டாங்கி சேலைக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கி இருக்கிறது. தற்போது விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் தயாராகும் பால்கோவாவுக்கு புவிசார் குறியீடு வழங்கி பெருமைப்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் என்றாலே அனைவருக்கும் ஆண்டாள் கோயிலும், சுவை மிகுந்த பால்கோவாவும்தான் நினைவுக்கு வரும். திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு வரும் அனைவரும் பால்கோவாவை மறக்காமல் வாங்கி செல்கின்றனர். தரத்திற்கேற்ப ஒரு கிலோ பால்கோவா ரூ.200ல் இருந்து ரூ.250 வரை விற்கப்படுகிறது. கடந்த மாதம் பழநி பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு கிடைத்தது. தொடர்ந்து திண்டுக்கல் பூட்டு, காரைக்குடி கண்டாங்கி சேலைக்கு கிடைத்தது. தற்போது திருவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதால், விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பழநி பஞ்சாமிர்தமும்... பால்கோவாவும்...

இந்தியாவில் சுமார் 200 பொருட்களுக்கு மேல் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதில் விவசாயம் மற்றும் உணவு சார்ந்த 57 பொருட்களும் அடக்கம். புவிசார் குறியீட்டிற்கான சட்டம் 1999ல் இயற்றப்பட்டு, 2003ல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. கடந்த மாதம் ஆன்மிக நகரமான பழநியில் சுவைமிகு பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் கிடைத்துள்ள நிலையில், மற்றொரு ஆன்மிக நகரான திருவில்லிபுத்தூரில் தயாராகும் சுவைமிகு பால்கோவுக்கும் அங்கீகாரம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Tiruvilliputtur Balkova , Tiruvilliputtur Balkova, unique taste
× RELATED தனி சுவை கொண்டது ஆந்திரா செல்லும்...