எல்லா பக்கமும் வரிகள் சாதா கார்களை கூட வாங்க ஆளில்லை : மாருதி பார்கவா கொந்தளிப்பு

புதுடெல்லி: பெட்ரோல் டீசலுக்கு வரி, சாலை வரி, பதிவு கட்டணம் அதிகரிப்பு...இப்படி  எல்லா பக்கங்களிலும் வரிக்கு மேல் வரி என திணித்தால் சாதாரண கார்களை வாங்க கூட யாராலும் முடியாது. இப்படி சொல்லியிருப்பவர் மாருதி நிறுவன தலைவர் ஆர்சி. பார்கவா. அவர் மேலும் கூறியிருப்பதாவது: இரு சக்கர வாகனம்  ஓட்டும் நடுத்தர வர்க்கத்தினர் கார் வாங்க ஆசைப்படுவது இயல்பு. அதற்காக அவர்கள் தங்களை பொருளாதார ரீதியாக எடை போட்டுக் கொள்வர். ஆனால், சமீப காலமாக வரிக்கு மேல் வரி, ஒரு பக்கம் எல்லாவற்றிலும் ஜிஎஸ்டி வரி, இன்னொரு பக்கம் டீசல், பெட்ரோலுக்கு அதிக வரி, போதாக்குறைக்கு சாலை வரி அதிகரிப்பு, வாகன பதிவு கட்டணமும் உயர்வு. இப்படி வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்  என்றால், தயாரிப்பாளர்களுக்கு வரிச்சுமை.

முடிவெடுக்க முடியாமல் வங்கிகள் முடங்கிப்போன போக்கு, ஏர் பேக் உட்பட காருக்கான பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் வரியால் விலை உயர்த்த வேண்டிய நிலை  ஆகியவற்றாலும் வாகன விற்பனை குறைய துவங்கியது. நடுத்தர மக்களால் சாதாரண காரை வாங்க கூட முடியாத அளவுக்கு கனவு வாகனமாகி விட்டது. ஆல்டோ கார் 50 சதவீதம் விற்பனை சரிந்ததற்கு இது தான் காரணம். வரிகள், கட்டணங்கள் எல்லாம் சேர்த்து கார்கள் விலை சுமார் 55 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்து விட்டது. சில மாநிலங்களில் ரூ. 20 ஆயிரம் வரை கூட சாலை வரி போடப்பட்டுள்ளது. வங்கிகளை பொறுத்தவரை, சிறிய அளவில் கூட விதிகளை தளர்த்த தயாரில்லை. வாகன கடன் வழங்குதிலும் பெரும் கெடுபிடி காணப்படுகிறது. அரசு இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தி வாகன விற்பனை மட்டுமல்ல, பல துறைகளில் சரிவுக்கு காரணம் என்ன என்பதை கண்டறிந்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பார்கவா கூறினார்.

Related Stories: