ஐசிசி டெஸ்ட் தரவரிசை ஸ்மித், கம்மின்ஸ் தொடர்ந்து முதலிடம்

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்டிங் மற்றும் பந்துவீச்சு தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித், பேட் கம்மின்ஸ் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளனர். இங்கிலாந்து அணியுடன் நடந்து வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரில், ஆஸி. வீரர் ஸ்மித் 3 டெஸ்டில் 671 ரன் குவித்து (அதிகம் 211, சராசரி 134.20, சதம் 3, அரை சதம் 2) விஸ்வரூபம் எடுத்துள்ளார். இந்த சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லியை பின்னுக்குத் தள்ளி நம்பர் 1 அந்தஸ்தை கைப்பற்றிய அவர், சமீபத்திய ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

கோஹ்லி 903 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ள நிலையில், ஸ்மித் 937 புள்ளிகளுடன் முன்னிலையை உறுதிப்படுத்தி உள்ளார். நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் (878) 3வது இடத்தில் நீடிக்கிறார். இந்திய வீரர்கள் புஜாரா (825), ரகானே (725) இருவரும் முறையே 4வது மற்றும் 7வது இடத்தை தக்கவைத்துள்ளனர். பந்துவீச்சாளர்களுக்கான ரேங்கிங்கில் ஆஸி. வேகம் பேட் கம்மின்ஸ் 914 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். தென் ஆப்ரிக்காவின் காகிசோ ரபாடா (851), இந்திய வேகம் ஜஸ்பிரித் பூம்ரா (835) அடுத்த இடங்களில் உள்ளனர். இந்தியாவின் ஜடேஜா 12வது இடத்திலும், ஆர்.அஷ்வின் 14வது இடத்திலும் உள்ளனர்.

Tags : Smith ,Cummins ,ICC Test , Smith, Cummins tops, ICC Test rankings
× RELATED தொடரை வெல்வது யார்?: ஸ்டீவ் ஸ்மித்...