×

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இந்தியா தொடர்ந்து முன்னிலை: ஆஸ்திரேலியாவுக்கு 4வது இடம்

துபாய்: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.உலகின் டாப் 9 அணிகள் பங்கேற்கும் இந்த சாம்பியன்ஷிப்பை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சமீபத்தில் அறிமுகம் செய்தது. 2021ம் ஆண்டு வரை நடைபெற உள்ள இந்த  சாம்பியன்ஷிப்பில், இந்திய அணி 2 போட்டிகளில் விளையாடி 2  வெற்றியுடன் 120 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறது.நியூசிலாந்து, இலங்கை அணிகள் தலா 1 வெற்றி, 1 தோல்வியுடன் 60 புள்ளிகள் பெற்று அடுத்த இடங்களில் உள்ளன. இங்கிலாந்துடன் நடந்து வரும் ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்டில் 185 ரன் வித்தியாசத்தில் வென்று 2-1 என முன்னிலை  பெற்ற ஆஸ்திரேலிய அணி கோப்பையை தக்கவைத்துக் கொண்டது.

மான்செஸ்டரில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்புக்கு 497 ரன் குவித்து டிக்ளேர் செய்ய, இங்கிலாந்து 301 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஆஸி. 2 வது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 186 ரன் என்ற  ஸ்கோருடன் டிக்ளேர் செய்ததை அடுத்து, 383 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 197 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (91.3 ஓவர்). டென்லி 53, ராய் 31, பேர்ஸ்டோ 25, பட்லர் 34, ஓவர்ட்டன் 21 ரன் எடுத்தனர். ஆஸி.  பந்துவீச்சில் கம்மின்ஸ் 4, ஹேசல்வுட், லயன் தலா 2, ஸ்டார்க், லாபஸ்ஷேன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். முதல் இன்னிங்சில் 211 ரன், 2வது இன்னிங்சில் 82 ரன் விளாசிய ஸ்டீவன் ஸ்மித் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 185 ரன் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்க, 5வது மற்றும் கடைசி டெஸ்ட்  லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை மறுநாள் (செப். 12) தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் ஆஸ்திரேலியா 4 போட்டியில் 2 வெற்றி, 1 டிரா, 1 தோல்வியுடன் 56 புள்ளிகள் பெற்று 4வது இடத்தில் உள்ளது.  இங்கிலாந்து அணி 4 போட்டியில் 1 வெற்றி, 1 டிரா, 2 தோல்வியுடன் 32 புள்ளிகள் பெற்று 5வது இடம் பிடித்துள்ளது.

Tags : ICC World Test Championship ,India , ICC World Test ,Championship, dominate
× RELATED குற்ற பின்னணியில் உள்ளவர்களை...