21 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பாதிப்பு வாகன விற்பனை தொடர்ந்து கடும் சரிவு

*ஆட்டோமொபைல் துறையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இதுவரை 3.5 லட்சம் பேருக்கு மேல் வேலை இழந்துள்ளனர்.
* தொடர்ந்து 10வது மாதமாக வாகன  விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது. இது கடந்த 1997-98க்கு பிறகு ஏற்பட்ட  மிகப்பெரிய சரிவாக பார்க்கப்படுகிறது.

புதுடெல்லி: பயணிகள் வாகன விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 21 ஆண்டுகளில் இல்லாத அளவில் கடும் சரிவை சந்தித்துள்ளது. இத்துடன் தொடர்ந்து 10வது மாதமாக வாகன விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இத்துறையில் பல லட்சம் பேர் வேலை இழந்துள்ள நிலையில், விற்பனை தொடர்ந்து சரிவதால் மேலும் வேலையிழப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தை தொழில்துறையினரிடையே ஏற்படுத்தியுள்ளது. பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்றவற்றால் வாகன விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. 2 மாதங்களுக்கு முன்பு ஆட்டோமொபைல் டீலர்ஸ் சங்கங்களின் சம்மேளனம் (எப்ஏடிஏ) வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி, நாடு முழுதும் கடந்த 18 மாதங்களில் 271 டீலர்கள் தங்களது விற்பனை நிலையத்தை மூடிவிட்டனர். இதில் 245 டீலர்கள், பயணிகள் வாகனங்கள் விற்பனை செய்பவர்கள்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இதுவரை 3.5 லட்சம் பேருக்கு மேல் வேலை இழந்துள்ளதாக ஆட்டோமொபைல் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. உதிரிபாக உற்பத்தி நிறுவனங்களில் ஒரு லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். கடந்த வாரம் நடந்த இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்க மாநாட்டில், அந்த சங்கத்தின் தலைவர் ராஜன் வதேரா பேசுகையில், ஆட்டோமொபைல் துறையில் உற்பத்தி பிரிவில் மட்டும், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய சுமார் 15,000 பேர் வேலை இழந்துள்ளனர். மந்தநிலை தொடர்ந்தால், மேலும் பல லட்சம் பேரின் வேலை பறிபோகும் அபாயம் உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆட்டோமொபைல் துறை பங்களிப்பு சுமார் 50 சதவீதமாகவும், ஜிஎஸ்டியில் 15 சதவீதமாகவும் உள்ளது என்று கூறியிருந்தார்.

இந்த சூழ்நிலையில் தொடர்ந்து 10வது மாதமாக வாகன விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது. இது கடந்த 1997-98க்கு பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய சரிவாக பார்க்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட்டில் 1,96,524 பயணிகள் வாகனங்கள் விற்கப்பட்டுள்ளன. முந்தைய ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் விற்பனை 31.57 சதவீதம் குறைந்துள்ளது. இதுபோல் இந்த மாதத்தில் 1,15,957 கார்கள் விற்கப்பட்டுள்ளன. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 41.09 சதவீதம் சரிவாகும் என இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம் (சியாம்) தெரிவித்துள்ளது.சியாம் புள்ளி விவரப்படி, கடந்த மாதத்தில் பயணிகள் வாகனங்கள், டூவீலர்கள், வணிக பயன்பாட்டு வாகனங்கள் ஆகிய பிரிவுகளில் சேர்த்து மொத்தம் 18,21,490 வாகனங்கள்  விற்பனை ஆகியுள்ளன. இது கடந்த ஆண்டு ஆகஸ்டில் விற்பனை எண்ணிக்கை 23,82,436 ஆக இருந்தது. இத்துடன் ஒப்பிடுகையில் விற்பனை 23.55 சதவீதம் சரிந்துள்ளது.

இதற்கு முன்பு கடந்த ஜூலை மாதத்தில் இதுபோன்ற மோசமான விற்பனை சரிவு ஏற்பட்டது. அதாவது ஜூலையில் வாகன விற்பனை 19 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 18.71 சதவீதம் சரிந்து 18,25,148 ஆக இருந்தது. ஒட்டு மொத்த அளவில் 30.98 சதவீதம் விற்பனை சரிந்து  2,00,790 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. பயணிகள் வாகன பிரிவில் மாருதி சுசூகி விற்பனை 36.14 சதவீதம் சரிந்து 93,173 வாகனங்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளன.இதுபோல் ஹூண்டாய் மோட்டார்ஸ் (38,205 வாகனங்கள் விற்பனை) 16.58 சதவீதம், மகிந்திரா (13,504) 31.58 சதவீதம் சரிந்துள்ளதாக அறிவித்துள்ளன.

டூவீலர்கள் விற்பனை 22.24 சரிந்துள்ளது. 15,14,196 டூவீலர்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. வணிக பயன்பாட்டு வாகனங்கள் விற்பனை 38.71 சதவீதம் சரிந்து  51,897 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.  இதுபோல், பைக் விற்பனை 22.33 சரிந்து 9,37,486 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஹீரோ மோட்டார் கார்பொரேஷன் 20.97 சதவீதம், ஹோண்டா மோட்டார்ஸ் 26.26 சதவீதம், டிவிஎஸ் 20.37 சதவீதம் சரிவை சந்தித்துள்ளன. இழப்பை ஈடுகட்ட வாகன உற்பத்தியாளர்கள் தொழிற்சாலைகளை சில நாட்களுக்கு மூடி வருகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் இத்துறையில் வேலையிழப்பு மேலும் அதிகரித்து விடும் என தொழில்துறையினர் அச்சம் தெரிவிக்கின்றனர்.

Tags : Vehicle sales decline
× RELATED 21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்