×

அதிசய விண்கலம்

நன்றி குங்குமம் முத்தாரம்

செவ்வாய் மற்றும் நிலவுக்கு மக்களை அழைத்துச் செல்ல பெரும் முனைப்புடன் இயங்கிவருகிறார் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் சி.இ.ஓ எலன் மஸ்க் என்பது அனைவரும் அறிந்த விஷயம். சமீபத்தில் அவர், ‘‘மக்கள் தங்களின் வீட்டை விற்று செவ்வாய்  கிரகத்தில் குடியேறும் காலம் வெகுதொலைவில் இல்லை. செவ்வாய்க்கு சென்று திரும்ப ஒரு லட்சம் டாலர் போதும்...’’ என்று டுவிட்டி, விண்வெளி சுற்றுலா பிரியர்களை அசரடித்துள்ளார்.

ஒரு காலத்தில் ஒரு வேளை உணவுக்கே கஷ்டப்பட்ட எலன் மஸ்க் இன்று உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவர். குழந்தைப்பருவத்தின் தீராத தனிமை அவரை விண்வெளி மற்றும் கோள்களின் மீது அதிக காதல் கொண்டவராக மாற்றிவிட்டது.  எலன் மஸ்க்கின் பெருங்கனவு மரணிப்பதற்குள் செவ்வாய் கிரகத்தில் குடியேறுவது. அவரின் டுவிட்டர் பக்கத்துக்குச் சென்றால் செவ்வாய் கிரகத்தைப் பற்றிய பதிவுகள் தான் கொட்டிக் கிடக்கின்றன.

அவ்வளவு பிஸியான சூழலிலும் கூட ஃபாலோயர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சலிக்காமல் பதில் கொடுக்கிறார். ‘‘செவ்வாய் கிரகத்துக்குச் சென்றுவர ஒரு ஆளுக்கு எவ்வளவு செலவாகும்..?’’ என்பது பல ஃபாலோயர்களின் கேள்வி. ‘‘இப்போதைக்கு குறைந்தபட்சம் 5 லட்சம் அமெரிக்க டாலர்கள் செலவாகும்.  எத்தனை பேர் செல்கிறார்கள் என்பதைப் பொறுத்து இது மாறுபடும்.

ஆனால், செவ்வாய்க்குச் சென்று திரும்ப ஒரு லட்சம் டாலர் போதும் என்ற நிலை வெகுதூரத்தில் இல்லை...’’ என்ற எலன் மஸ்க்கின் பதில்தான் இப்போது டிரெண்ட். செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்புவதை கனவுத்திட்டமாகக் கொண்டிருந்தாலும், பூமிக்கு மாற்றாக நிலவைத்தான் பார்க்கிறார் எலன் மஸ்க். வெறுமனே திட்டமிடாமல் செவ்வாய் பயணத்துக்காக பிரத்யேகமாக ஒரு விண்கலத்தை உருவாக்கி வந்தார். அந்த விண்கலம் வெற்றிகரமாக வடிவமைக்கப்பட்டுவிட்டது.

ஆம்; செவ்வாய் பயணத்துக்காக வடிவமைக்கப்பட்ட ‘ஸ்டார்ஹோப்பர்’ என்ற விண்கலம் சில நாட்களுக்கு முன் சோதனை செய்யப்பட்டது. இதை ‘அதிசய விண்கலம்’ என்று ‘நாசா’வில் பணியாற்றுபவர்களே சொல்கிறார்கள். அந்த விண்கலம்  குறிப்பிட்ட எல்லையில் பறந்து பெரிதும் நம்பிக்கையூட்டியிருக் கிறது. மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்த எலன் மஸ்க் ஸ்பேஸ்எக்ஸ் ஊழியர்களை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.


Tags : Wonderful spacecraft,starhopper,spacex
× RELATED 21ம் தேதி ‘இந்தியா’ கூட்டணி பேரணி;...