தேடப்படும் குற்றவாளியாக 147 பேரை அறிவித்தது எஸ்பிஐ

புதுடெல்லி: வங்கிகளில் மோசடி செய்த 147 பேர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. கிங்பிஷர் அதிபர் விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்ஷி உட்பட 58 பேர் வங்கிகளில் கடன் மோசடி செய்து விட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர். வங்கிகள் தாமதமாக தகவல் தந்ததுதான் இவர்கள் தப்பிச்செல்ல முக்கிய காரணம் என்று கூறப்பட்டது. இதை தொடர்ந்து, தேடப்படும் பொருளாதார குற்றவாளிகளாக விமான நிலையங்கள், குடியுரிமை அதிகாரிகளுக்கு அறிவிப்பு அனுப்ப வங்கி அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நிதி மோசடி செய்தவர்களை தேடப்படுபவர்களாக அறிவித்து வங்கிகள் எடுத்த நடவடிக்கை குறித்து, புனேயை சேர்ந்த விகார் துர்வே என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

Advertising
Advertising

இதற்கு பதிலளித்துள்ள பாரத ஸ்டேட் வங்கி,  கடந்த 5 மாதங்களில் 147 பேரை வங்கி மோசடியாளர்களாக அறிவித்து, இவர்கள் தேடப்படும் பொருளாதார குற்றவாளிகள் என உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால், மேற்கண்ட தகவல் தங்களிடம் இல்லை என யூனியன் பாங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் சிந்த் வங்கி, பாங்க் ஆப் பரோடா ஆகியவை தெரிவித்துள்ளன. இத்தகைய அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை என யூகோ வங்கி தெரிவித்துள்ளது.  சமீபத்திய புள்ளிவிவரத்தின்படி, கடந்த நிதியாண்டில் 6,801 வங்கி மோசடி வழக்குகளில் ₹71,542.93 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில் 5,916 வழக்குகளில் ₹41,167.04 கோடி மோசடி செய்யப்பட்டிருந்தன.

Related Stories: