அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள் பட்டியல்

இந்திய இருசக்கர வாகன சந்தையில், கடந்த 2018-ம் ஆண்டு ஜுலை மாத விற்பனையை காட்டிலும், நடப்பாண்டின் (2019) ஜுலை மாத இருசக்கர வாகன விற்பனை மிக மோசமான நிலையை சந்தித்துள்ளது. இந்தியாவில், நடப்பாண்டில், கடந்த ஜுலை மாதம் விற்பனையான ஸ்கூட்டர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டர் முதலிடத்தை பிடித்துள்ளது. டிவிஎஸ் ஜுபிடர் 2வது இடம், சுஸுகி அக்செஸ் ஸ்கூட்டர் 3வது இடம் பிடித்துள்ளன. முதலிடத்தை பிடித்துள்ள ஆக்டிவா ஸ்கூட்டர் 2,43,604 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இதையடுத்து, டிவிஎஸ் ஜுபிடர் 57,731 யூனிட்களையும், சுஸுகி அக்செஸ் 51,498 யூனிட்களையும் விற்பனை செய்துள்ளன. இப்பட்டியலில், முதலிடம் பிடித்துள்ள ஹோண்டா ஆக்டிவா, இந்திய ஸ்கூட்டர் சந்தையில் தொடர்ச்சியாக முதல் இடத்திலேயே உள்ளது. இதன்மூலம், விற்பனையில் தனிக்காட்டு ராஜாவாக உள்ளது இந்த ஸ்கூட்டர். இந்திய வாகன சந்தை மிக மோசமான விற்பனை சரிவை சந்தித்து வந்தாலும், குறிப்பிட்ட வாகன உற்பத்தி நிறுவனங்களின் சில மாடல்கள் மட்டும் தனது கெத்தை குறைக்காமல் காட்டி வருகிறது. அந்தவகையில், ஹோண்டா ஆக்டிவாவும் தனது மவுசை குறைத்துக்கொள்ளவில்லை.

ஹோண்டா நிறுவனம், ஆக்டிவா ஸ்கூட்டரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய வாகன சந்தையில் அறிமுகம் செய்தது. தற்போது, இந்த ஸ்கூட்டரின் ஐந்தாம் தலைமுறை மாடல் ‘’ஆக்டிவா 5ஜி’’ என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. விரைவில், ‘’ஆக்டிவா 6ஜி’’ மாடல் களமிறக்கப்பட உள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள டிவிஎஸ் ஜுபிடர், விற்பனை சரிவை சந்தித்து இருந்தாலும், மற்ற ஸ்கூட்டர்களை காட்டிலும் சற்று அதிகமான விற்பனையை பெற்று, இந்த இடத்தை தக்கவைத்துள்ளது. மேலும், இந்த விற்பனை சரிவை சீர்செய்ய, கணிசமான அப்டேட்டுகளுடன் அது அறிமுகமாகியுள்ளது. அந்தவகையில், புதிய ஸ்டைல் மற்றும் சிறப்பம்சங்களை பெற்றவாறு அது காட்சியளிக்கின்றது. மூன்றாவது இடத்தை பிடித்துள்ள சுஸுகி அக்செஸ் ஸ்கூட்டரில் 125 மாடல் மிகவும் பிரபலமானதாக உள்ளது.வாகன பதிவு கட்டணம் உயர்வு, எரிபொருள் விலைஉயர்வு, வரி உயர்வு போன்ற காரணங்களால் மக்கள் புதிய வாகனங்களை வாங்குவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும், மின் வாகனங்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவமும் இந்த சரிவிற்கு முக்கிய காரணமாக உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

Tags : List, best-selling, scooters
× RELATED 8,888 காவலர் பணியிடங்களுக்கான தேர்வானவர்கள் இணையதளத்தில் பட்டியல் வெளியீடு