×

பறக்கும் பாம்பு தெரியுமா?

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

பறக்கும் பாம்பு(Chrysopelea ornata) அல்லது தங்க மரப் பாம்பு, அழகு பறக்கும் பாம்பு, தங்க பறக்கும் பாம்பு என்பது ஒரு நஞ்சில்லா பாம்பு வகை. இப்பாம்புகள் தெற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா பகுதிகளில் காணப்படுகிறது. இப்பாம்புகள் பொதுவாக பச்சை நிறம் கொண்டதாகவும், கறுப்பு குறுக்கு கோடுகளும், மஞ்சள், சிவப்பு நிற பாகங்களும் கொண்டிருக்கும். இது உடல் மெலிந்து வழவழப்பான செதில்களுடன் இருக்கும். சுருங்கிய கழுத்தும், மழுங்கிய மூக்கும் பெரிய கண்களும், தட்டையான தலையும் கொண்டிருக்கும். பறக்கும் பாம்பு 11.5-ல் இருந்து 130 செ.மீ (0.38 -4.27 அடி) நீளம்வரை உள்ளது. முதிர்வு நீளம் சுமார் 1 மீ (3.3 அடி) ஆகும். இதன் வால் மொத்த நீளத்தில் சுமார் நான்கில் ஒருபங்கு இருக்கும். இந்தியாவில் இந்த பாம்புகள் உத்தரப்பிரதேசத்தின் மலைப்பகுதிகள், வட பீகார், வட / மேற்கு வங்கம். கிழக்கில் அருணாச்சலப்பிரதேசம். அந்தமான் தீவுகளில் உள்ள காடுகளில் காணப்படுகிறது. இப்பாம்புகள் உயரமான மரக்கிளையிலிருந்து கீழே குதிக்கவல்லது. எளிதாக மரத்தை விட்டு மரத்திற்கு தாவும் திறன் பெற்றது.

இந்தப் பாம்புகள் சிறந்த மரமேறி ஆகும். மரத்தின் பட்டைகளில் உள்ள சொரசொரப்பைப் பயன்படுத்தி சிறப்பாக ஏறும். இவை தென்னை போன்ற செங்குத்தான மரத்தில்கூட தங்கள் உடலில் உள்ள செதில்களைப் பயன்படுத்தி வேகமாக ஏறும். இவற்றின் உணவு பல்லிகள், வௌவால்கள், முட்டைகள் மற்றும் பூச்சிகள் போன்றவை. இப்பாம்புகள் தன் எதிரிகளான விலங்குகளிடமிருந்து தப்பிக்க, தன் இரையைப் பிடிக்க, காட்டினுள் நகர மரத்திலிருந்து மரம் தாவ கிளைடர் எனப்படும் சறுக்கு வானூர்தி போல காற்றில் மிதந்து செல்கிறது. இது தன் விலா எலும்புகளால் தன் அடிப்பகுதி தசைகளை விரித்து தலைகீழ் U போல ஆக்கி காற்றில் உந்தி மிதந்து மரத்திலிருந்து மரம் தாவ இயலுகிறது. சில நேரங்களில் மரத்திலிருந்து தரையில் இறங்கவும் இவ்வுத்தியைப் பயன்படுத்துகின்றன. இப்பாம்புகளின் இனப்பெருக்கம் பற்றி குறைவாகவே அறியப்படுகிறது. இவை முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்பவை. இவை ஆறு முதல் பன்னிரண்டு முட்டைகள் வரை இடுகின்றன.

Tags : South Asia, Flying Snake, Gold Tree Snake, Andaman Islands
× RELATED தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது...