இராமேஸ்வரத்தில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விசைப்படகு மீனவர்கள் 3வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம்

இராமேஸ்வரம்: இலங்கை அரசின் நடவடிக்கையை கண்டித்து இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 3வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை கடற்படையால் கைப்பற்றப்படும் தமிழக மீனவர்களின் படகுகளை, இலங்கை அரசின் புதிய சட்டத்தின்படி அரசுடைமையாக்க இலங்கை நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதனால் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்படும் மீன்பிடி படகுகள், அரசுடைமையாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் 3வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை அரசால் அரசுடைமையாக்கப்பட்ட சுமார் 150க்கும் மேற்பட்ட விசைப்படகுகளுக்கு உரிய நிவாரணத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட  மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் உள்ள விசைப்படகு மீனவர்கள் கடந்த 24ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் மூன்றாவது நாளான இன்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

இதனால் சுமார் 900க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் சுமார் 50 ஆயிரம் மீன்பிடி தொழிலாளர்களும் 1 லட்சத்துக்கும்  மேற்பட்ட மீன்பிடி சார்ந்த தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர். இதை தொடர்ந்து தங்களது கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்கவில்லை என்றால் வரும் 29ம் தேதி ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரையிலுள்ள அனைத்து பகுதி மீனவர்களையும் ஒன்று திரட்டி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என மீனவர்கள் சங்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Rameshwaram, 3 feature request, funky fishermen, 3rd day, struggle
× RELATED பல்வேறு துறைகளில் பெரும் சாதனையாளராக...