அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் சீன நாணயமான யுவானின் மதிப்பு 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு

அமெரிக்கா: அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், சீன நாணயமான யுவானின் மதிப்பு 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. சீன பங்குச்சந்தைகளும் கடும் சரிவைச் சந்தித்தன. சீன இறக்குமதிகள் மீதான வரி விதிப்பை டிரம்ப் நிர்வாகம் அதிகப்படுத்தியதற்கு பதிலடியாக, டாலருக்கு நிகரான யுவானின் மதிப்பை சீனா சரியச் செய்தது. அமெரிக்கா கூடுதல் வரிகளை விதித்தாலும், சீன இறக்குமதிகள் மலிவாகவே நீடிக்கும் வகையில், நாணய மதிப்பிறக்க நடவடிக்கையை சீனா எடுத்திருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர். யுவானுக்கு நிகரான டாலரின் மதிப்பு அதிகரிக்கும்போது வாங்கும் சக்தி அதிகரித்து, கூடுதல் வரி விதிப்பினால் ஏற்படும் சுமையை ஈடுகட்டும் நோக்கில் சீனா நாணய மதிப்பிறக்கம் செய்கிறது. இந்த மாதத்தில் இதுவரை 3.6 சதவீதம் அளவுக்கு யுவானின் மதிப்பு சரிய சீனா அனுமதித்துள்ளது. மேலும், 75 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான அமெரிக்க இறக்குமதிகள் மீது சீனா பதிலடி வரி விதிப்பை மேற்கொண்டது.

இதையடுத்து, 550 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான சீனப் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிப்பை டிரம்ப் அறிவித்தார். இந்நிலையில், யுவானின் மதிப்பு மேலும் 0.6 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது. டாலருக்கு நிகரான யுவானின் மதிப்பு 7.15 ஆகியுள்ளது. அதாவது 7.15 யுவான் கொடுத்தால்தான் ஒரு டாலருக்கு பரிவர்த்தனை செய்ய முடியும். 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு யுவானின் மதிப்பு இந்த அளவுக்கு சரிவது இதுவே முதல்முறை. சீன பங்குச்சந்தைகளும் கடும் சரிவைச் சந்தித்துள்ளன. ஹாங்காங்கில் நடைபெற்று வரும் போராட்டங்களால் ஹாங்காங் பங்குச்சந்தையும் சரிவைச் சந்தித்துள்ளது. இதனிடையே, டாலருக்கு நிகராக 7.1 என்ற அளவோடு, யுவானின் மதிப்பு சரிவதை சீன மத்திய வங்கி தடுத்து நிறுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே யுவானின் மதிப்பு மேலும் சரியக் கூடும் என சொல்லப்படுகிறது.  இரு நாடுகளும் பதிலடி நடவடிக்கைகளை தொடர்வதால் இப்போதைக்கு வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படுவதற்கோ, வர்த்தகப் போர் தணிவதற்கோ வாய்ப்பில்லை என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் இரு நாட்டுப் பொருளாதாரங்களும் பாதிக்கப்படுவதோடு, உலக பொருளாதார வளர்ச்சியிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. வர்த்தகப் போர் தீவிரமடைந்து, அமெரிக்கா புதிய வரி விதிகளை விதித்திருப்பது  சீன பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், அடுத்த ஆண்டு சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதத்திற்கு கீழ் குறையும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதைத் தடுப்பதற்கு சீனாவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வங்கிகள் நடுத்தர கால கடன் வழங்கும் அளவை அதிகரிக்கும் வகையில் 150 பில்லியன் யுவான் அளவுக்கு நிதியை, வங்கி முறைக்குள் சீன மத்திய வங்கி  செலுத்தியுள்ளது. வங்கி வட்டி விகிதத்தை 3.3 சதவீதம் என்ற அளவில் சீன மத்திய வங்கி மாற்றாமல் வைத்துள்ளது. இருப்பினும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், வங்கி வட்டி விகிதம் மேலும் குறைக்கப்படலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Related Stories: