×

ஆதி திராவிடர்களுக்கு தனி மயானத்தை அமைத்து, சாதி பிரிவினையை அரசே ஊக்குவிக்கலாமா ? : தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை : ஆதி திராவிடர்களுக்கு தனி மயானத்தை அமைத்து, சாதி பிரிவினையை அரசே ஊக்குவிக்கலாமா என்று தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.வேலூர் மாவட்டம் நாராயணபுரத்தை சேர்ந்த குப்பன் என்பவர் விபத்தில் உயிரிழந்த நிலையில், அவர் ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்தவர் என்பதால் மயானத்திற்கான பாதை மறிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதனால்  குப்பனின் உடலை மேம்பாலத்தில் இருந்து தொட்டில் கட்டி கீழே இறக்கி மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக தொடுத்து அதனை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் முன்பு விசாரணைக்கு வந்த போது, நாராயணபுர கிராமத்தில் இருக்கும் ஆதி திராவிடர்களுக்கு தனி மயானம் அமைந்துள்ளதாக வட்டாட்சியர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், தமிழகத்தில் ஆதி திராவிடர்களுக்கென தனி மருத்துவமனைகளோ, அரசு அலுவலகங்களோ, காவல் நிலையங்களோ இல்லாத நிலையில், அவர்களுக்கு தனி மயானத்தை அரசே அமைத்து கொடுப்பது சாதி, பிரிவினையை ஊக்குவிப்பது போல் உள்ளதாக தெரிவித்தனர். மேலும் தெருக்களில் இருந்த சாதி பெயர்களை நீக்க வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், ஆதிதிராவிடர் நலப்பள்ளி என்ற பெயர்களை நீக்காதது ஏன் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினார். குப்பன் உடலை பாலத்தில் இருந்து கயிறு கட்டி இறக்கியது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆகஸ்ட் 28ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Tags : Adi Dravidar, High Court, Question, Tamil Nadu Government, Caste
× RELATED தமிழக கவர்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்