×

திண்டுக்கல் அருகே குடிநீரில் புழுக்கள் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே குடிநீர் குழாயில் புழுக்களுடன் குடிநீர் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். திண்டுக்கல் ஒன்றியம் பள்ளப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டப்பட்டி, ஜெயந்தி காலனியில் நேற்று மதியம் பொதுக்குழாயில் குடிநீர் வந்துள்ளது. அதில் புழுக்களுடன் தண்ணீர் வந்ததால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘எங்கள் பகுதிக்கு குடிக்க தண்ணீர் 20 நாட்களுக்கு ஒரு முறைதான் வருகிறது. இதனால் நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். மேலும் தேவைக்கு இடையில் குடிநீர் விலைக்கு வாங்கியும் பயன்படுத்தி வருகிறோம்.

இந்நிலையில் இதுபோன்று குடிநீரில் புழுக்கள் கலந்து வந்தால் நாங்கள் எப்படி பயன்படுத்துவது, எங்களுக்கு நோய் பரவும் நிலையும் உள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் பழனி பைபாஸ் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்’ என்றனர்.

Tags : public , presence of worms , drinking ,water near Dindigul
× RELATED தமிழக கவர்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்