கடற்கரை பகுதியான கழுமங்குடாவில் பணிகள் முடிந்து ஓராண்டாகியும் காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி: பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை

சேதுபாவாசத்திரம்: சேதுபாவாசத்திரம் அருகே பணிகள் முடிந்து ஓராண்டாகியும் பயன்பாட்டுக்கு வராத மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென சிஐடியூ மீனவர் பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சை மாவட்ட கலெக்டர் மற்றும் ஒன்றிய ஆணையருக்கு சிஐடியூ மீனவர் பிரிவு சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளர் நாகேந்திரன் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: சேதுபாவாசத்திரம் அருகிலுள்ள மரக்காவலசை ஊராட்சி கடற்கரை பகுதியான கழுமங்குடாவில் கடும் குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. இதனை போக்கும் வகையில் பல்வேறு முறை கோரிக்கை வைத்ததன்பேரில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டி அமைப்பதற்கு சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்து தொட்டி அமைக்கப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிறது.

அதே சமயம் கடற்கரை பகுதியில் உப்பு தண்ணீர் தான் கிடைக்கும் என்பதால் குடிநீர் தொட்டிக்கு பம்பிங் மூலம் குடிநீர் கொண்டு வருவதற்கு ஏதுவாக துறையூர் ஐயனார் கோவில் அருகே ஆழ்குழாய் கிணறும் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது கழுமங்குடா பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. வாகனங்களில் வரும் குடிநீரை பணம் கொடுத்து வாங்கும் சூழ்நிலை நிலவுகிறது. ஆனால் பணிகள் முடிந்து ஒரு ஆண்டுக்கு மேலாகியும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி காட்சி பொருளாகவே உள்ளது. எனவே குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வண்ணம் குடிநீர் தொட்டியை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவில் கூறியுள்ளார்.

Tags : Drinking,Water Tank, One Year,Work
× RELATED நீர்மட்டம் குறைவு, மோட்டார் பழுதால்...