மயானத்துக்கு செல்லும் பாலம் சேதமானதால் சடலத்தை கால்வாய் வழியாக எடுத்து செல்லும் அவலம்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

திருவெண்ணெய்நல்லூர்: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த சித்தலிங்கமடம் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அங்கு இறப்பவர்களின் சடலத்தை அருகிலுள்ள ராகவன் கால்வாயில் மறுகரையில் அமைந்துள்ள   மயானத்தில்தான்  புதைக்க வேண்டும். இந்நிலையில்   கடந்த 6 வருடங்களுக்கு முன்பு நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்களே நிதி திரட்டி தற்காலிக பாலம் கட்டி பயன்படுத்தி வந்தனர்.அந்த பாலம் கடந்த ஓராண்டுக்கு முன்பு இடிந்து சேதமடைந்தது.  தற்போது மீண்டும் கால்வாயில் இறங்கி சடலங்களை கிராம மக்கள் தூக்கி செல்லும் அவலநிலை உருவாகியுள்ளது.  

மழைக்காலங்களில் கால்வாயில் தண்ணீர் செல்லும் போது உயிரிழந்தவர்களின் சடலத்தை மயானத்துக்கு கொண்டு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் சிலரின் உடலை கால்வாயின் கரையோரங்களில் கிராம மக்கள் புதைத்து விடுகின்றனர்.   மழைக்காலங்களில் கால்வாயை கடந்து செல்ல அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.   கால்வாயில் பாலம் கட்ட உரிய அதிகாரியிடம் பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர்.  பாலம் கட்டும் பணி துவங்கப்படவில்லை.  போர்க்கால அடிப்படையில் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சித்தலிங்கமடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: