வாட்ஸ்அப் குழுவால் இணைந்து பாலாற்றை சுத்தப்படுத்த களம் இறங்கிய இளைஞர்கள்: 50 மூட்டை பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

வேலூர்: அப்துல்கலாம் பெயரால் வாட்ஸ்அப் குழு ஏற்படுத்தி அதன் மூலம் இணைந்த இளைஞர்கள் பாலாற்றை சுத்தப்படுத்த களம் இறங்கினர்.சில மாதங்களுக்கு முன்பு வேலூர் அடுத்த அலமேலுமங்காபுரம் பகுதியில் கழிவறை இல்லாமல் அவதிப்பட்ட பெண்ணுக்கு தினேஷ்சரவணன் என்ற இளைஞர் கழிவறை கட்டித்தந்தார். ஐடி நிறுவனத்தில் வேலைபார்க்கும் இந்த இளைஞர் அப்துல்கலாம் மாணவர் குழு என்ற வாட்ஸ்அப் குழுவை ஏற்படுத்தினார். அதில் இணைந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடங்கி அரசு, தனியார் ஊழியர்கள் வரை கரம் கோர்த்து பல்வேறு சமூக பணிகளை இக்குழுவில் உள்ளவர்கள் செய்து வருகின்றனர்.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பாலாற்றங்கரையில் பனை மர விதைகளை நட்ட இவர்கள், நேற்று காலை முதல் மாலை வரை பாலாற்றை சுத்தப்படுத்தும் பணியில் இறங்கினர். முதலில் ரங்காபுரம் பாலாற்றில் குவிந்திருந்த  பிளாஸ்டிக் மற்றும் மருத்துவக்கழிவுகளை அகற்றினர். மாலை வரை நடந்த இப்பணியில் 50 மூட்டை பிளாஸ்டிக் கழிவுகள் சேர்ந்தன. பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சிக்காக விற்ற இக்குழு இளைஞர்கள் அந்த பணத்தை ஏழை எளியவர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், தொடர்ந்து வரும் வாரங்களில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமைகளில் பாலாற்றில் தொடர்ந்து பிளாஸ்டிக், மருத்துவக்கழிவுகள் அகற்றும் பணியிலும் ஈடுபட போவதாகவும் கூறினர்.

Related Stories: