×

மானாமதுரை அரசு மருத்துவமனையில் சிடி ஸ்கேன், எக்ஸ்ரே வசதி வேண்டும்: மக்கள் வலியுறுத்தல்

மானாமதுரை: மானாமதுரை அரசு மருத்துவமனையில் சிடி ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே வசதிகள் இல்லாததால் நோயாளிகள் சிகிச்சைக்காக சிவகங்கை, மதுரைக்கு செல்லவேண்டிய அவலநிலை உள்ளது. எனவே மானாமதுரை அரசு மருத்துவமனையில் சிடி ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மானாமதுரை தாலுகாவில் சுமார் 2 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். மானாமதுரை நகரில் மட்டும் 39 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். மதுரை-ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் ஏற்படுகிற விபத்து, மானாமதுரை  வழியாக செல்லும் சுற்றுலா பயணிகளுக்கும் அவசர சிகிச்சை பெற மானாமதுரை அரசு மருத்துவமனை பயனுள்ளதாக உள்ளது. இங்கு உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுவதற்கு ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கு என தனித்தனியாக 54 படுக்கை வசதிகளுடன் கூடிய வார்டுகள் உள்ளன. அதேபோல் பிரசவ வார்டு, அவசர சிகிச்சைக்கான வார்டும் தனித்தனியாக உள்ளன. இதனால் மானாமதுரை, ராஜகம்பீரம், கீழப்பசலை, மேலப்பசலை, கல்குறிச்சி, கொன்னக்குளம், தெ.புதுக்கோட்டை உள்ளிட்ட முக்கிய கிராமங்களில் இருந்து ஐநூறுக்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் தினமும் வந்து செல்கின்றனர்.

காலை முதல் நள்ளிரவு வரை வாகனவிபத்து, தீக்காயம், பிரசவம் என 24 மணிநேரமும் 108 ஆம்புலன்ஸ் பரபரப்பாக இயங்கும் அளவிற்கு மருத்துவமனை இருந்தாலும் அவசர சிகிச்சைக்கு வருபவர்களை பரிசோதிக்க உரிய மருத்துவ உபகரணங்கள் இல்லை.வாகன விபத்துகளில் சிக்கி வருவோர்களுக்கு முதலில் தலைக்காயம் குறித்து பரிசோதிக்க வேண்டுமென்றால் சிடி ஸ்கேன் எடுக்க வேண்டும். அதேபோல வயிற்றில் கட்டி உருவாவது முதல் கருப்பை கோளாறு, மைக்ரேன் தலைவலி உள்ளிட்ட உடல் சம்பந்தப்பட்ட பரிசோதனைகளுக்கு ஸ்கேன் எடுக்க வெளியூர் செல்லவேண்டியுள்ளது. மேலும் சிறு காயங்களில் லேசான எலும்பு முறிவுக்கு சாதாரண எக்ஸ்ரே வசதி மட்டுமே உள்ளதால் துல்லியமாக சிகிச்சை அளிக்க வேண்டிய நோயாளிகள் படம் எடுக்க சிவகங்கைக்கு செல்ல வேண்டியுள்ளது. இவ்வாறு ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே வசதி இங்கு இல்லாததால் வரும் நோயாளிகள் அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.எனவே பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப மானாமதுரை அரசு மருத்துவமனையில் பரிசோதனை கருவிகளை நிறுவிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலர் சரவணன் கூறுகையில், வெளிநோயாளிகள், உள்நோயாளிகள், வாகனவிபத்துகளில் சிக்கி வருவோருக்கு எந்தவிதமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்றாலும் சிடி ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே வசதியிருந்தால் டாக்டர்கள் உடனடியாக சிகிச்சை அளித்து நோயாளிகளின் வேதனையை போக்க முடியும். தற்போது மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இருந்தும் ஆபரேசன் நடத்த முடியாததற்கு காரணம் 24 மணிநேரம் செயல்படும் ஆய்வகமோ, ஸ்கேன் வசதிகளோ இல்லை. இருந்தால் சிகிச்சை அளிப்பது எளிதாக இருக்கும். மாவட்ட நிர்வாகமும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினரும் மனது வைத்தால் மக்களுக்கு நல்லது நடக்கும் என்றார்.

Tags : CT scan, x-ray facility ,Manamadurai Government Hospital,people's,insistence
× RELATED கர்நாடகாவில் ஒரே நாளில் 25,005 பேருக்கு கொரோனா தொற்று உறுதி