×

தனியார் பள்ளிகளுக்கு இணையாக கம்ப்யூட்டர் லேப், ஸ்மார்ட் கிளாஸ் என அசத்தும் கிராமத்து அரசு நடுநிலைப்பள்ளி: ஆண்டுதோறும் உயரும் மாணவர் எண்ணிக்கை

சேலம்: சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே, கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் கம்யூட்டர் லேப்,  ஸ்மார்ட் கிளாஸ் ரூம் என அசத்தி வருவதால்,தனியார் பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் இப்பள்ளியை தேடி வருகின்றனர். தமிழகத்தில் அரசுப்பள்ளி என்றாலே,பெற்றோர்கள் அலறியோடும் நிலை தான் இன்னமும் காணப்படுகிறது. இந்த நிலையை மாற்ற,பள்ளிக்கல்வித்துறை மட்டுமின்றி,சமூக ஆர்வம் கொண்ட அந்தந்த பகுதி வாழ் பொதுமக்களும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதுபோன்ற ஒரு சமூக பங்களிப்புடன்,சேலம் மாவட்டத்தில் ஒரு அரசு நடுநிலைப்பள்ளி,தனியார் பள்ளிக்கு இணையாக செயல்பட்டு வருகிறது. சேலம் மாவட்டம் மேச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட வன்னியனூர் என்ற குக்கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.போக்குவரத்து வசதியற்ற கிராமத்தில், செயல்படும் பள்ளியில்,விவசாய மற்றும் தினக்கூலிகளின் பிள்ளைகள் அருமையான கல்வி கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் பள்ளியின் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற சிவக்குமார், அப்போது 92 ஆக இருந்த மாணவர் எண்ணிக்ைகயை,நடப்பாண்டு 235 ஆக உயர்த்திய பெருமைக்குள்ளாகியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:பள்ளியில் சேரும் போது,ஒன்றாம் வகுப்பு மற்றும் 2ம் வகுப்பில் தலா 4 மாணவர்கள் மட்டுமே இருந்தது நெருடலை ஏற்படுத்தியது. கற்பித்தலில் முதல் கவனம் செலுத்தி, மாணவர்களை வீட்டுப்பாடம் மேற்கொள்ளும் நடைமுறைக்கு கொண்டு வந்தேன்.பின்னர்,2012ம் ஆண்டு குடியரசு தின விழாவில் கலந்துகொண்ட பெற்றோர்கள்,மாணவரின் ஆர்வத்துடன் கூடிய பங்களிப்புகளை கண்டு,பள்ளியின் முன்னேற்ற நடவடிக்கைகளில் கைகோர்த்தனர். இதன்பலனாக,அந்த ஆண்டு ஒன்றாம் வகுப்பில்,23 பேர் சேர்ந்தனர்.இதனை தொடர்ந்து, சிறப்பு நன்கொடை, பொதுமக்களின் பங்களிப்பு,கல்விச்சீர் வழங்கல் என பள்ளி வளர்ச்சியடைந்தது. கடந்த ஆண்டு, மாவட்ட அளவில் தூய்மைப் பள்ளியாகத் தேர்வு செய்யப்பட்டதுடன், அதற்கான ஊக்கத்தொகை ₹10 ஆயிரம் மற்றும் விருதை அப்போதைய கலெக்டர் ரோகிணி வழங்கினார்.

மத்திய அரசு நடத்திய அறிவியல் கண்காட்சியில் மாவட்ட அளவில் வெற்றி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய கண்காட்சியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று மாநில அளவிற்கு மாணவர்கள் சென்றனர். பள்ளியில்,விளையாட்டுக் குழு,குடிநீர் மற்றும் சத்துணவு மேற்பார்வைக் குழு, கழிவறை மேலாண்மைக் குழு, நூலகக் குழு,கணினிக் குழு, தோட்டப் பராமரிப்புக் குழு,சுத்தம் மற்றும் சுகாதாரக் குழு ஆகியவை உள்ளன. இதில்,ஆண்டு தோறும் சிறப்பாக செயல்படும்  இரண்டு குழுக்களைத் தேர்ந்தெடுத்து சுழற்கோப்பை வழங்கப்படுகிறது. வாசிப்பு திறனை மேம்படுத்த, பள்ளியில் உள்ள மரத்தடியில் நாற்காலி,புத்தங்கள்,பருவ இதழ்கள்,தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களுடன்,மரத்தடி நூலகம் செயல்படுகிறது.  ஊர் பொதுக்கள் இணைந்து, பள்ளியிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் முள்ளுக்காடாக இருந்த இடத்தை சமன் செய்து விளையாட்டுத் திடலாக மாற்றி பள்ளிக்கு வழங்கினர். ஒவ்வொரு வகுப்பறையிலும் ஒரு ஒலிப்பெருக்கி அமைக்கப்பட்டு,அதன் கட்டுப்பாடு தலைமை ஆசிரியர் அறையில் வைக்கப்பட்டுள்ளது.

அதேபகுதியைச் சேர்ந்த அலமேலு கண்ணையன் என்பவர், பள்ளியின் வளர்ச்சிக்காக 12.5 சென்ட் நிலத்தை தானமாக வழங்கியதன் அடிப்படையில்,சுற்றுச்சுவர் கட்டப்பட்டு, வழிபாட்டு திடலும், தோட்டமும் ஏற்பாடாகியுள்ளது.சமீபத்தில்,நன்கொடையாளர்கள் மூலம், ₹4 லட்சம் செலவில் கலையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. எந்தவிழாவாக இருந்தாலும், மாணவர்களே அதனை வழிநடத்துகின்றனர். இதுதவிர, பள்ளியில் 10 கணினிகள் கொண்ட ஆய்வகம் நிறுவப்பட்டுள்ளதுடன், பகுதிநேரமாக கணினி ஆசிரியர் ஒருவரை நியமித்து,மாணவர்களுக்கு பயிற்சி வழங்கி வருகிறோம்.மேலும்,கண்ணன் என்ற நன்கொடையாளரின் உதவியுடன், ₹1.50 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. இதில்,அனைத்து விதமான சாப்ட்வேர்களையும் மாணவர்களே கையாண்டு,பாடப்புத்தக சந்தேகங்களை தீர்த்துக்கொள்வது கூடுதல் சிறப்பம்சமாகும்.
நடப்பாண்டு,மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டு, 29 மாணவர்கள் பயின்று வருகின்றனர். நமது பள்ளியை பொறுத்தவரை,இருப்பவர்கள் பொருள் மற்றும் நிதியை கொடையாகவும், நலிவடைந்தவர்கள் உழைப்பை கொடையாகவும் அளித்து வருகின்றனர். அதன்படி,சுற்றுச்சுவர்,மராமத்து பணிகள் அனைத்தையும் மாணவர்களின் பெற்றோர் உழைப்பாக கொடுத்துள்ளனர்.இது மேலும் தொடரும் என நம்பிக்கையுடன் கூறுகிறார் பள்ளி தலைமை ஆசிரியர் சிவக்குமார்.

இப்பள்ளிக்கென,அரசு அனுமதித்துள்ள 145 மாணவர் என்ற எண்ணிக்கையையும் கடந்து, சுற்றியுள்ள 10 கிலோ மீட்டர் தொலைவிலிருந்தும் மாணவர்கள் வருகின்றனர். குறிப்பாக, தனியார் பள்ளிகளிலிருந்து பலர் இடைநின்று, இப்பள்ளியில் சேர்ந்திருப்பதுடன், பெற்றோர்கள் தங்களாகவே வேன் வைத்துக் கொண்டு குழந்தைகளை இப்பள்ளிக்கு அனுப்பி வைக்கிறனர். சிறந்த பள்ளிக்கான ஆவணப்படுத்துதலில் இடம் பெற்றுள்ள இப்பள்ளிக்கான பணிகளை, ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் ரமேஷ்குமார் மற்றும் மான்விழி ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர். அமைவிடம் எதுவாக இருந்தாலும், நல்ல தலைமை, பொறுப்பான ஆசிரியர்கள், பள்ளி நலனில் அக்கறையுள்ள பொதுமக்கள் ஒன்றிணைந்தால் சிறப்பான பள்ளியை உருவாக்கலாம் என்பதற்கு வன்னியனூர் கிராம நடுநிலைப்பள்ளி ஓர் உதாரணமாக அமைந்துள்ளது.

92ல் இருந்து 235 ஆக உயர்ந்த எண்ணிக்கை
வன்னியனூர் பள்ளியில்,கடந்த  2011ம் ஆண்டில்,மொத்தமாக 92 மாணவர்கள் மட்டுமே இருந்தனர். அதன்பின்னர் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக, 2012ம் ஆண்டில் 98, 2013ல் 106, 2014ல் 118, 2015ல் 129, 2016ல் 133, 2017ல் 141, 2018ல் 173 என ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து நடப்பு 2019-2020ம் கல்வியாண்டில் 235 ஆக மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. நடப்பாண்டு பல  அரசுப்பள்ளிகளில் ஒருவர் கூட சேராத நிலையில், இப்பள்ளியில் மட்டும் 81 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Annual Rural Government,Middle School,Computer Lab, Smart Class, Parallel,Private Schools
× RELATED ஜன.17 அரசு விடுமுறை என்பதால் பிப்.4-ம்...