பொருளாதார மந்தநிலையால் புதிய சிக்கல்? எய்ம்ஸ்... இழுபறி ஏன்?: ஐகோர்ட் கிளையில் மீண்டும் வழக்குத் தொடர முடிவு

மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசு நிதி கைவிரிக்கப்பட்டு, உலக வங்கி கடனுக்கும் கடும் நிபந்தனை விதித்துள்ளது. இதற்கு இந்திய பொருளாதார மந்தநிலை காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளையில் மீண்டும் பொதுநல வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு 2015ம் ஆண்டு பட்ஜெட்டில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவித்தது. இதனை எங்கு அமைப்பது என முடிவு எடுப்பதில் 3 ஆண்டுகள் இழுபறி நீடித்தது. ஐகோர்ட் மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்த பிறகு, 2018ல் மதுரை தோப்பூர் தேர்வு செய்யப்பட்டது. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன் 2019 ஜனவரி 27ல் அவசர கோலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.1,264 கோடி மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என அறிவித்து, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 224.42 ஏக்கர் பரப்பில் உடனடியாக கட்டுமான பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அடிக்கல் நாட்டி 7 மாதங்களாகியும் தோப்பூரில் எந்தவித பணிகளும் ஆரம்பமாகவில்லை.

ஏனென்றால் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவற்கு மத்திய அரசு நிதி எதுவும் ஒதுக்கவில்லை. மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் ஏமாற்றமே மிஞ்சியது. வரலாறு காணாத வகையில் தற்போது இந்திய பொருளாதாரம் மந்தநிலையில் இருப்பதால், புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது சாத்தியமற்றது என்பதால் எய்ம்ஸ்க்கு நிதி ஒதுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனை உருவாக்க உலக வங்கி கடனுக்கு பரிந்துரைக்கப்பட்டது. உலக வங்கியின் ஜப்பான் நாட்டு குழுவினரும், மத்திய அரசு குழுவினரும் சமீபத்தில் மதுரை வந்தனர். கடன் கோரும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டு, அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆலோசனையும் நடத்தினர். அந்த குழுவினர் பல்வேறு கேள்விக்குறிகளை எழுப்பினர். கடன் வழங்குவதற்கான நிபந்தனைகள், கடனை திருப்பி செலுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசித்து மத்திய அரசிடம் அறிக்கை அளிக்கப்படும் என தெரிவித்தனர்.

இதன்பிறகு இந்த விவகாரம் கிணற்றில் போட்ட கல்லாக கிடக்கிறது. மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விட்டதா, அதற்கு மத்திய அரசின் அந்த நிபந்தனைகள் என்ன என்பது குறித்த எந்த தகவலும் வெளியாகாமல் மூடுமந்திரமாக நீடிக்கிறது.மருத்துவத்துறை வட்டாரத்தில் விசாரித்ததில் அவர்கள் கூறும் அதிர்ச்சித் தகவல்கள் வருமாறு:எய்ம்ஸ் மருத்துவமனை, மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு இல்லாமல், உலக வங்கி கடனை எதிர்பார்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அந்த வங்கி கடனை திருப்பி செலுத்தும் வழிமுறைகளில் கடும் நிபந்தனை விதிக்கிறது, ஆராய்ச்சி மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி கட்டுவதற்கான கடனை திருப்பி செலுத்தும் வழிமுறைகளை முன்கூட்டியே கேட்டு நிபந்தனை விதிப்பது கடினமானது. ஏனென்றால் இதை வர்த்தக ரீதியானதாக கருத முடியாது.

ரோடு மாதிரி சுங்கக்கட்டணம் வசூலிக்க முடியாது. எனவே கடும் நிபந்தனைகளை ஏற்று கடன் எப்போது கைகூடும் என்பது பெரும் ள்விக்குறியானது. மத்திய அரசு நிதி ஒதுக்கி பணியை தொடங்கலாம். எனவே எய்ம்ஸ் எப்போது எட்டும் என்று சொல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசும் மத்திய அரசுக்கு குரல் எழுப்பி அழுத்தம் கொடுக்காமல் மவுனம் சாதிக்கிறது.இவ்வாறு தெரிவித்தனர்.மதுரையில் எய்ம்ஸ் அமைய போராட்டம் நடத்திய குழு ஒருங்கிணைப்பாளர் மணிமாறன் கூறும்போது, ‘‘எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டி 7 மாதங்களாகியும் பணி தொடங்காதது ஏன் என்று தகவல் உரிமை சட்டத்தின்படி மத்திய அரசிடம் கேட்டுள்ளேன். அதன் பதிலை பார்த்து அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும்’’ என்றார்.

எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஏற்கனவே பொதுநல வழக்கு தொடர்ந்த மதுரை சமூகநல ஆர்வலர் ரமேஷ் கூறும்போது, ‘‘தோப்பூரில் 4 ஆண்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என ஐகோர்ட் மதுரை கிளையில் மத்திய அரசு உறுதி அளித்து ஓராண்டாகிறது. இந்நிலையில், அடிக்கல்லுக்குப் பிறகு ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கப்படவில்லை. மத்திய அரசு நிதி ஒதுக்காததற்கு பொருளாதார வீழ்ச்சி காரணமா என்ற கேள்வியும் எழுகிறது. உலக வங்கி கடன் விவகாரம் என்ன ஆனது என்பதும் மர்மமாக உள்ளது. எது எப்படியோ... மத்திய அரசு ஐகோர்ட் கிளையில் அளித்துள்ள உறுதியின்படி எய்ம்ஸ் விரைவாக கட்டி முடிக்க ஐகோர்ட் கிளையில் விரைவில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன்’’ என்றார்.

Related Stories: