ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு: முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரம் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் கோரிய முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக  கூறப்படும் ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்ட நிலையில் மாயமான முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கடந்த 21-ம் தேதி இரவு அதிரடியாக கைது செய்தது. தொடர்ந்து, ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அஜய்குமார் முன்னிலையில் கடந்த 22-ம் தேதி ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.

 இதனையடுத்து, ப.சிதம்பரத்துக்கு 26-ம் தேதி (இன்று)வரை நிபந்தனையுடன் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், இன்று காவல் முடிந்து மீண்டும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் படவுள்ளார்.  இதற்கிடையே, டெல்லி ஐகோர்ட்டு தனக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்ததை எதிர்த்து ப.சிதம்பரம் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து உள்ளார். அந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்ஜாமீன் கோரிய ப.சிதம்பரத்தின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சிபிஐ ஏற்கனவே கைது செய்துள்ளதால், ஜாமீன் பெற கீழமை நீதிமன்றத்தை ப.சிதம்பரம் அணுகலாம் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையே,, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ப.சிதம்பரம் மீது பாஜக அரசு பொய்வழக்கு போட்டு அரசியல் ரீதியாக பழிவாங்குவதாக காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Related Stories: