×

கோவை ஆலாந்துறை அருகே பெருங்கற்கால குறியீடுகள் கண்டுபிடிப்பு

கோவை: கோவை ஆலாந்துறை அருகேயுள்ள காளிமங்கலம் பகுதியில் பெருங்கற்கால பொருட்கள் அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெருங்கற்கால பண்பாடு கி.மு 1000 முதல் கி.பி 300 வரை என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த காலத்தின் அமைப்புகள் பெரும்பாலும் இறந்தவர்களுக்காக அமைக்கப்படும் நினைவு சின்னங்கள். இதை பெரிய கற்களை பயன்படுத்தி அமைப்பார்கள். நடுகல், குடைக்கல், முதுமக்கள் தாழிகள் பெருங்கற்கால சின்னங்களாக கருதப்படுகிறது.  

கொங்கு மண்டலத்தில் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளில் பல பெருங்கற்கால பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், கல்லூரி கல்வெட்டியியல் பேராசிரியர் ரவி தலைமையிலான மாணவர் குழுவினர், கோவை ஆலாந்துறை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள காளிமங்கலம் கிராமத்தில் தொல்லியல் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் பெருங்கற்கால நினைவு சின்னங்கள், பொருட்கள் அதிகளவில் கிடைத்தது. இதில், மிகவும் முக்கியமானதாக சுடுமண் ஓட்டில் இரண்டு குறியீடுகள் இருந்ததை கண்டறிந்தனர். ஒன்று செடி போன்றது. மற்றொன்று பம்பரம் சுழல்வது ேபான்றது. மேலும், இந்த இரண்டு குறியீடுகளும் ஒரே சுடுமண் ஓட்டில் கிடைத்து இருக்கிறது. கொங்கு மண்டலத்திற்குரிய வண்ணப்பூச்சு பூசப்பெற்ற சிவப்பு நிற வளைகோடுகளுக்கு மத்தியில் குறியீடுகள் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து பேராசிரியர் ரவி கூறியதாவது: பெருங்கற்கால பண்பாட்டில் இன குழுக்களாக வாழ்ந்தவர்கள் தங்களை அடையாளப்படுத்தி கொள்ள பறவைகள், தாவரங்கள் போன்றவற்றின் பெயர்களை வைத்து கொள்வார்கள். காளிமங்கலத்தில் மேற்கொண்ட களஆய்வில் இன குழு மக்களின் குறியீடுகள் கிடைத்துள்ளது. இதனால், இப்பகுதியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே ஒரே ரத்த உறவு உடைய குழு மனிதர்கள் வாழ்ந்துள்ளனர் என தெரியவந்துள்ளது. பொதுவாக தமிழகத்தில் பெருங்கற்கால மக்களின் சுடுமண் ஓடுகளில் செடி, இறகு போன்ற குறியீடு, கடல் அலை வண்ணப்பூச்சு வளைகோடுகள் காணப்படும். ஆனால், தற்போது கிடைத்துள்ள சுடுமண் ஓட்டில் பம்பரம் குறியீடு கண்டறியப்பட்டுள்ளது. இது புதிய இனத்தை குறிக்கிறது. தமிழகத்தில் பம்பரம் குறியீடு எங்கும் கண்டறியப்படவில்லை. இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு ரவி கூறினார்.

Tags : discovery ,epicenter ,symbols,Coimbatore
× RELATED கோவையில் பெரியார் சிலையை அவமதித்த...