×

தமிழக மின்வாரியத்துக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் கோடிக்கணக்கில் மின்கட்டண பாக்கி: மத்திய அரசிடம் நிதிக்காக காத்திருப்பு

வேலூர்: தமிழக மின்வாரியத்துக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் கோடிக்கணக்கில் மின்கட்டண பாக்கியை வைத்திருக்கிறது. இந்த பாக்கியை பைசல் செய்வதற்காக மத்திய அரசின் நிதியை எதிர்பார்த்து காத்திருப்பதாக பிஎஸ்என்எல் வட்டாரங்கள் தெரிவித்தன. நாடு முழுவதும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 6 ஆயிரம் செல்போன் டவர்கள் செயல்பாட்டில் உள்ளன. இதில் ஆயிரம் டவர்கள் தமிழகத்தில் மட்டும் உள்ளன. தற்போது செல்போன் உபயோகிப்பாளர்கள் பிஎஸ்என்எல் பக்கம் திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் அந்நிறுவனம் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பிஎஸ்என்எல் தற்காலிக ஊழியர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல் சம்பளம் வழங்கப்படாததால் அவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு சொந்தமான செல்போன் டவர்களுக்கான மின்கட்டணம் செலுத்த முடியாமல் அந்நிறுவனம் விழிபிதுங்கி நிற்கிறது. தமிழகத்தில் மட்டும் பிஎஸ்என்எல் நிறுவனம் ஏறத்தாழ ₹10 கோடி வரை மின்கட்டண பாக்கி வைத்திருப்பதாகவும், பிஎஸ்என்எல் டவர்களுக்கான மின்கட்டணம் மட்டுமல்ல, மின்தடையின்போது டவர்கள் தொடர்ந்து இயங்குவதற்கான டீசல் வாங்குவதற்கு கூட நிதியின்றி பிஎஸ்என்எல் நிறுவனம் தவித்து வருவதாகவும், இதே நிலை நாடு முழுவதும் நிலவுவதாகவும் பிஎஸ்என்எல் வட்டாரங்கள் வேதனை தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகள் தரப்பில் கேட்டபோது, ‘இப்போதுதான் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பக்கம் மக்களின் கவனம் திரும்பியுள்ளது. இந்த நிலையில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக பிஎஸ்என்எல் நிறுவனத்தை கைகழுவ மத்திய அரசு மறைமுகமாக திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே விஆர்எஸ் மூலம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டு அது தடுக்கப்பட்டுள்ளது.

தற்காலிக ஊழியர்களுக்கு 7 மாதங்களாக ஊதியமில்லை. பிஎஸ்என்எல் டவர்களுக்கு மின்கட்டணம் கட்டவில்லை. டீசல் வாங்குவதற்கு கூட நிதியில்லாத நிலையை ஏற்படுத்தியிருக்கிறது மத்திய அரசு. 4ஜி அலைவரிசைக்கான ₹14 ஆயிரம் கோடியையும் தரவில்லை. இப்போதுதான் மின்கட்டணத்துக்கான நிதியை தருவதாக சொல்லியிருக்கிறது. ஏற்கனவே தமிழக மின்வாரியம் நினைவூட்டல் கடிதம் அனுப்பியிருக்கிறது. ஆகஸ்ட் மாத இறுதிக்குள் கட்டுவதாக சொல்லியிருக்கிறோம். நிதி வந்ததும் மின்கட்டணம் செலுத்தப்படும்’ என்றனர்.


Tags : BSNL ,pay millions,rupees,Tamil Nadu,power plant
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...