காரைக்குடி அரசு மருத்துவமனையில் கு.க. ஆபரேஷன் செய்த பெண் மீண்டும் கர்ப்பம்: இழப்பீடு கேட்டு புகாரால் பரபரப்பு

காரைக்குடி:  காரைக்குடி அரசு மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்ட பெண் ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் கருத்தரித்துள்ளதாக புகார் அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி என்ஜிஜிஓ காலனி, ரயில்வே பீடர் ரோட்டில்  மாவட்ட தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு கடந்த 2018 பிப்ரவரியில் தேவகோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அன்றே குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ஒரு வருடம் கழித்து தற்போது அவர் மீண்டும் கருவுற்றுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இழப்பீடு கேட்டு  மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக மருத்துவமனை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து பெண்ணுக்கு சிகிச்சையளித்த மருத்துவர் மற்றும் பணியாளர்கள் விளக்கம் அளிக்க கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், ‘‘காரைக்குடி தலைமை மருத்துவமனையில் கடந்த 2018 பிப். 8ம் தேதி தேவகோட்டை பெண்ணுக்கு எல்எஸ்சிஎஸ் மூலம் ஆண் குழந்தை பிரசவிக்கப்பட்டு அன்றே குடும்பக் கட்டுப்பாடு அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது மீண்டும் கருவுற்றுள்ளார். எனவே அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் மற்றும் பணியாளர்களின் மீது நடவடிக்கை எடுக்குமாறும் இழப்பீட்டுத்தொகை வழங்குமாறும் கோரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு ஏதுவாக இரண்டாவது அறுவை சிகிக்சை  மேற்கொள்ளப்பட்ட விவர அறிக்கை, உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர், செவிலியர் மற்றும் இதர பணியாளர்கள் அனைவரும் சிகிச்சையளித்த விவரத்தை அனுப்ப வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: