×

மிக மோசமாக மாசுபட்ட நகரம் திருப்பூர்: தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவிப்பு

திருப்பூர்: திருப்பூரில் காற்று, நீர், நிலம் ஆகியவை கடுமையாக  பாதிக்கப்பட்டுள்ளதால் புதிதாக தொழில் துவங்கவும், விரிவாக்கம் செய்ய தேசிய  பசுமை தீர்ப்பாயம் தடைவிதித்துள்ளதோடு திருப்பூர் மிகமோசமாக மாசுபட்ட நகரம்  என்கிற பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி  அடைந்துள்ளனர். தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுப்படி  மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் நாடு முழுவதும் உள்ள 100 நகரங்களில்  காற்று, நீர், நிலம் மாசுபாடு குறித்து ஆய்வு நடத்தியது. மாசுபாடு  அடிப்படையில் மிக மோசமாக மாசுபட்ட நகரம், அதிக மாசு நிறைந்த நகரம், மாநகரம்  என மூன்றாக வகைப்படுத்தியுள்ளது. இந்த மூன்று வகைகளில் மாசுக்  கட்டுப்பாட்டு வாரியத்தின் சிவப்பு ஆரஞ்சு நிற பட்டியலில் உள்ள தொழில்  நிறுவனங்கள் புதிதாக துவங்கவும், விரிவாக்கம் செய்யவும் அனுமதிக்க கூடாது  என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இது அங்கு பணியாற்றும்  தொழிலாளர்களுக்கும், தொழில் முனைவோருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.

மத்திய  மாசு கட்டுப்பாட்டு வாரிய ஆய்வறிக்கையில் 70 புள்ளிகளை கொண்ட திருப்பூர் மிகமோசமான மாசுபட்ட  நகரம் என்கிற பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இது ஆயத்த ஆடை உற்பத்தி  துறையினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. திருப்பூரில் ஆடை உற்பத்தித் துறை  சார்ந்த சிவப்புநிற வகைப்பாட்டில் உள்ள சாயசலவை பிரிண்டிங் நிறுவனங்கள்  புதிதாகவும் விரிவாக்கம் செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது. இது குறித்து மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தின் செயலாளர் தமிழ்மணி கூறியதாவது: திருப்பூரில் இயங்கி வரும் சாய ஆலைகள், பிளிச்சிங், பிரிண்டிங் நிறுவனங்களில் 90 சதவீதம் பேர்  வடமாநில தொழிலாளர் வேலைபார்க்கின்றனர்.

இவர்கள் அவ்வப்போது சொந்த ஊர்  சென்று விடுவதால் இவர்களின் உடல்நிலை குறித்து நமக்கு தெரிவதில்லை.  திருப்பூரில்  ஏற்கனவே  துணிகளை தைக்கும் போது காற்றில் வெளியேறும் துகள் நாளுக்கு நாள்  அதிகரித்து வருகிறது. லட்சக்கணக்கான இயந்திரங்களிலிருந்து வெளியேறும்  வெப்பம், வாகன புகைகளால் மனிதர்களுக்கு பல்வேறு வியாதிகளோடு வாழ்க்கை  நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் புதிய  சாய ஆலைகள் துவங்கவும், தற்போதுள்ள சாய ஆலைகளில் கூடுதலாக துணிகளுக்கு சாயமிட மாசுகட்டுப்பாட்டுவாரியம் அனுமதி வழங்க கூடாது. மேலும், தமிழக  தொழிலாளர்களுக்கு எந்த விதத்திலும் பயன் இல்லாத தொழிற்சாலைகளை துவங்க  மாசுகட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்ககூடாது. திருப்பூர் பொது மக்களை  பாதுகாக்கும் வகையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் நல்ல முடிவை எடுத்துள்ளது  வரவேற்கத்தக்கது.இவ்வாறு தமிழ்மணி  கூறினார்.

Tags : worst polluted city ,Tirupur,National Green Tribunal,announcement
× RELATED திருப்பூரில் சாலையோர தள்ளுவண்டி...