×

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எஸ்.பி.ஜி திரும்பப் பெறப்பட்டு, இசட் பிளஸ் பாதுகாப்பை வழங்கியது மத்திய அரசு

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு சிறப்பு பாதுகாப்பு குழுவை திரும்பப் பெற்று, இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி (Special Protection Group) எனப்படும் சிறப்பு பாதுகாப்பு குழுவை மத்திய அரசு திரும்பப் பெற்றது.  3 மாத ஆய்வுக்கு பின் புலனாய்வு அமைப்பு விடுத்த பரிந்துரையின் அடிப்படையில் மன்மோகன் சிங்கிற்கு வழங்கப்படும் சிறப்பு பாதுகாப்புப் படை பாதுகாப்பை குறைக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்தது.

இது குறித்து அமைச்சரவையிலும் ஆலோசிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டது. மன்மோகன் சிங்கிற்கு அச்சுறுத்தல் குறைந்து இருப்பதால் அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் வழங்கப்படும் சிறப்புக் குழுவின் பாதுகாப்பைப் திரும்ப பெற புலனாய்வுத் துறை அறிவுறுத்தி இருந்தது. இதனால் மன்மோகன்சிங்கிற்கு பாதுகாப்பு அளித்து வரும் வீரர்கள் திரும்ப அழைக்கப்பட்டு அவருக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. எஸ்.பி.ஜி எனும் பாதுகாப்பு பிரிவில் சுமார் 3 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். காவல்துறை உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு படைகளில் சிறப்பாக செயல்பட்டவர்கள் எஸ்.பி.ஜி குழுவுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்

இந்திய பிரதமரைச் சுற்றி எந்நேரமும் எஸ்.பி.ஜி எனப்படும் சிறப்புப் பாதுகாப்பு படை இருக்கும். 1984ம் ஆண்டு அப்போதே பிரதமர் இந்திரா காந்தியை அவரது பாதுகாவலர் சுட்டுக் கொன்றார். அதன் பிறகு பிரதமரின் பாதுகாப்புக் குறித்து ஆராய்ந்து அதற்கென தனிப்படையாக எஸ்.பி.ஜி. 1985ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த படையினர் தான் குடியரசுத் தலைவர், துணைத் தலைவர், பிரதமர், முன்னாள் பிரதமர் ஆகியோரது பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன.   தற்போது பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் குடும்பத்தினரான, சோனியா காந்தி, ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் இந்த பாதுகாப்பில் இருந்து வருகின்றனர்.

Tags : Prime Minister, Manmohan Singh, Special Security Group, Z Plus, Federal Government, SPG
× RELATED உ.பியில் இதுவரை 8 பாஜ எம்எல்ஏக்கள்...