×

பொள்ளாச்சி பஸ்நிலையத்தில் டைமிங் பிரச்னை அரசு பஸ்சை முற்றுகையிட்ட தனியார் பஸ் டிரைவர்கள்: போலீசார் சமரசம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மத்திய பஸ் நிலையத்தில் டைமிங் பிரச்னையால் அரசு பஸ்சை  முற்றுகையிட்ட தனியார் பஸ் டிரைவர்களால் பரபரப்பு ஏற்பட்டது. பொள்ளாச்சி மத்திய பஸ் நிலையத்தின் ஒரு பகுதி டிராக்கில், கோவை வழித்தட  அரசு மற்றும் தனியார் பஸ்கள் நிறுத்தப்படுகிறது. குறிப்பிட்ட நிமிடத்திற்கு  ஒருமுறை கோவைக்கு பஸ் போக்குவரத்து இருப்பதால், அடிக்கடி அரசு மற்றும்  தனியார் பஸ் டிரைவர்களிடையே டைமிங் பிரச்னை ஏற்படுகிறது. இதில் நேற்று, இரு  தனியார் பஸ்சிலும் பயணிகள் ஏறியதும் அந்த பஸ்சை டிரைவர்கள் இயக்கி புறப்பட  தயாராகினர். அப்போது இரு பஸ்களுக்கு முன்பாக அரசு பஸ் ஒன்று விரைந்து  வந்து பயணிகளை ஏற்றி கொண்டிருந்தது. இதையறிந்த தனியார் பஸ் டிரைவர்கள், ‘எங்கள் பஸ்களில் அதிக பயணிகள் ஏறிவிட்டதால் நாங்கள் முன்பாக சென்று  விடுகிறோம்’ என்றனர். அதற்கு அங்கு நின்ற அரசு பஸ் டைம் கீப்பரோ, கால  அட்டவணையின்படியே குறிப்பிட்ட நேரத்தில் தான் பஸ்சை இயக்கி செல்ல வேண்டும்.  விரைந்து வந்து, முன்கூட்டியே டிராக்கில் நிறுத்தி பயணிகளை ஏற்றியதும்  புறப்பட கூடாது’ என்றார்.

 அப்போது தனியார் பஸ் டிரைவர்கள், ‘இங்கிருந்து கோவைக்கு செல்வதற்கு முன்பு, பல்வேறு இடங்களை சுத்தி செல்வதால் ஏற்கனவே ஒரு டிரிப்  கட் செய்துள்ளோம். இதனால் பயணிகளை  முன்பாகவே ஏற்றிகொண்டு புறப்படுகிறோம்’ன்றனர். அதற்கு, டைம் கீப்பரோ, பஸ்சை உங்களுக்கு ஒதுக்கப்பட்ட  நேரத்தில்தான் பஸ் இயக்க வேண்டும் என மீண்டும் வாதிட்டார்.  இதனால்,  ஆத்திரமடைந்த தனியார் பஸ் டிரைவர்கள் பலர், அரசு பஸ் முன்பு  முற்றுகையிட்டவாறு நின்றுகொண்டனர். இதையறிந்த கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர்  மகேந்திரன் மற்றும் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சமரசம் செய்து,  நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். அப்போது இரு தரப்பிலிருந்தும்  தங்கள் நியாயங்களை தெரிவித்தனர்.

பின் இன்ஸ்பெக்டர், பொள்ளாச்சி பஸ்  நிலையத்தில் தனியார் மற்றும் அரசு பஸ் டிரைவர்களுக்கு இடையே அடிக்கடி  டைமிங் பிரச்னை நடக்கிறது. இதனால் பயணிகள் விரைந்து செல்ல முடியாமல்   தவிக்கின்றனர். உரிய நேரத்தில் பஸ்சை இயக்க வேண்டும் என தெரிவித்தனர். இதுசம்பந்தமாக பேச்சு நடத்தி முடிவெடுக்க வேண்டும்.எனவே, பயணிகள்  பாதிக்கும் அளவில் நடக்க கூடாது.யாராக இருந்தாலும், மீண்டும் டைமிங்  பிரச்னை ஏற்படுத்தி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தினால், வழக்குப்பதிவு  நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். இதையடுத்து, தனியார் பஸ் டிரைவர்கள்  தங்கள் பகுதியில் உள்ள நியாயங்களை இன்ஸ்பெக்டரிடம் தெரிவித்து விட்டு  அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன்பின் பஸ்கள் அங்கிருந்து புறப்பட்டு  சென்றது. இச்சம்பவத்தால் மத்திய பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Private bus drivers,blocking ,state bus, Pollachi bus stand
× RELATED கவர்ச்சிக்கரமான அறிவிப்புகள் மூலம்...