வள்ளியூர் காவல் நிலையத்தில் நடந்த முன்னாள் பெண் கவுன்சிலர் மர்மசாவில் சிபிசிஐடி விசாரணை: ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்

நெல்லை: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில பொறுப்பாளர் உஷாபாஷி நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது: கூடங்குளம் அணுமின் நிலைய தீயணைப்பு துறை ஊழியர் கிறிஸ்டோபர் என்பவர் மீது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வழக்கு பதியப்பட்டு, காவல்துறையால் தேடப்பட்டு வந்தார். இந்நிலையில் அவருக்கு வேண்டப்பட்டவர் எனக் கூறி குமரி மாவட்டம் பூமத்திவிளையை சேர்ந்த முன்னாள் கவுன்சிலரான லீலாபாய் என்பவரை வள்ளியூர் போலீசார், கடந்த 17ம் தேதி விசாரணைக்கு அழைத்து வந்தனர். அவர் ரத்த வாந்தி எடுத்ததாகவும், மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றபோது இறந்து விட்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

காவல்துறை பலமாக அடித்ததால் மட்டுமே லீலாபாய் இறந்தார் என ஜனநாயக மாதர் சங்கம் கருதுகிறது. இதில் மனித உரிமை மீறப்பட்டுள்ளது. ஒருவருக்கு ரத்த சம்பந்தம் இல்லாத ஒருவரை நீதிமன்ற அழைப்பாணை இல்லாமல் அழைத்து வந்து, இரவு முழுவதும் காவல் நிலையத்தில் வைத்தது தவறு. எனவே லீலாபாய் மரணம் குறித்து மனித உரிமை ஆணையம் விசாரிக்கவும், சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்தவும் கேட்டுக் கொள்கிறோம். லீலாபாய் மரணத்தில் காவல்துறை மீது பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. இச்சம்பவத்தை கண்டித்து போராட்டங்களை நடத்தவும் திட்டமிட்டு உள்ளோம். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது.

காவலர்களாக பொறுப்பேற்கும்போது ஒவ்வொருவருக்கும் அளிக்கப்படும் பயிற்சியில் பாலின பாகுபாடுகள் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கற்பிக்கப்படுகிறது. ஆனால் பெண்கள் என்றால் தாழ்ந்தவர்களாக பார்க்கும் எண்ணம் இன்றளவும் தொடர்கிறது. சமூக வலைத்தளங்கள் பயன்பாடு அதிகரித்துவிட்ட சூழலில், அதுதொடர்பான குற்றங்களை தடுக்க வேண்டியதும் அவசியம். சைபர் கிரைம் பிரிவில் அதிக போலீசாரை நியமித்து விசாரணைகளை உடனுக்குடன் நடத்திட வேண்டும். சிறுகுழந்தைகள், பெண்கள் மீதான வன்கொடுமைகள் வருங்காலங்களில் முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும். இவ்வாறு தெரிவித்தார். பேட்டியின்போது மாதர் சங்க நிர்வாகிகள் கற்பகம், ஆயிஷா, வக்கீல் பழனி ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: