90 வயது சுதந்திரப் போராட்ட தியாகிக்கு ஓய்வூதியம் மறுப்பு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

டெல்லி: 90 வயதான சுதந்திரப் போராட்ட தியாகிக்கு ஓய்வூதியம் வழங்க மறுத்த மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இப்பிரச்சனையை உச்சநீதிமன்றம் வரை இழுத்து வந்து நீதித்துறையின் நேரத்தை வீணடித்து விட்டதாக மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், வேண்டுமென்றே சுதந்திரப் போராட்ட வீரரை துன்புறுத்தும் வகையில் இந்த வழக்கை இழுத்தடித்துக் கொண்டு வந்ததாக நீதிபதிகள் கண்டித்தனர். இதனை தொடர்ந்து ஏற்கனவே மாவட்ட நீதிமன்றமும் டெல்லி உயர்நீதிமன்றமும் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு ஓய்வூதியம் வழங்குமாறு அரசுக்கு அறிவுறுத்தி தீர்ப்புகளை வெளியிட்டனர். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நாட்டின் விடுதலைக்காக போராடியவர்கள், சிறை சென்று,குடும்பங்களை பிரிந்து, சொல்ல முடியாத வேதனைகளை அனுபவித்தனர்.

அவர்கள் எந்த பிரதிபலனையும் எதிர்பார்த்து இதனை செய்யவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். இதை அடுத்து பிரிவினைக்குப் பின்னர் பலர் தங்கள் ஆவணங்களை தொலைத்துவிட்டனர். இதனால் அவர்களுக்கு ஓய்வூதியம் மறுப்பது சரியல்ல எனவும், பல தியாகிகள் அரசு தரும் தியாகிகள் ஓய்வூதியம் கூட வேண்டாம் என்று மறுத்திருக்கிறார்கள் எனவும் அவர்கள் தெரிவித்தனர். தியாகிகள் ஓய்வூதியம் என்பது அவர்களுக்கு அளிக்கப்படும் மரியாதை என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இதை தொடர்ந்து அவ்வகையில் உள்ள சுதந்திரப் போராட்ட தியாகிக்கு ஓய்வூதியம் மறுப்பது கண்டிக்கத்தக்கது என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Related Stories: