ஜி-7 மாநாட்டின் இடையே இன்று அமெரிக்க அதிபர் டிரம்ப்-பிரதமர் மோடி பேச்சுவார்த்தை: முக்கிய பிரச்னை குறித்து ஆலோசனை

பாரிஸ்: ஜி 7 மாநாட்டின் இடையே இன்று பிற்பகல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பிரான்ஸ் நாட்டின் பியாரிட்ஸ் நகரில் ஜி-7 நாடுகளின் உச்சி மாநாடு நடக்கிறது. வளர்ச்சி அடைந்த  நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் உறுப்பினராக உள்ள இந்த அமைப்பில் இந்தியா இடம் பெறவில்லை. இருந்தாலும், இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும்படி,  மோடியிடம் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்தார். இதை ஏற்று, இந்த மாநாட்டில் மோடி கலந்து கொள்கிறார்.

இதற்காக, மீண்டும் அவர் பிரான்ஸ் செல்கிறார்.இந்த மாநாட்டில் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம், டிஜிட்டல் பரிமாற்றம் போன்ற சர்வதேச விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. மாநாட்டின்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் உட்பட பல  தலைவர்களை மோடி சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது, மோடியிடம் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசுவேன் என டிரம்ப் ஏற்கனவே கூறியுள்ளார். இந்நிலையில், மாநாட்டின் இடையே  பியாரிட்ஸ் நகரில் இன்று பிற்பகல் 3.45 முதல்  4.30 மணி வரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் பிரதமர் நரேந்திர மோடியும் நேருக்கு நேராக பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். 370வது சட்டப்பிரிவை ரத்து செய்ய இந்திய அரசு எடுத்த முடிவு அதன் உள்நாட்டு விவகாரம் என்றும்  இந்தப் பிரச்சினையில் இந்தியா பாகிஸ்தானைத் தவிர மூன்றாம் நாட்டின் தலையீட்டுக்கு இடமே இல்லை என்று இந்தியா ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது.

 

ஆயினும் காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று டிரம்ப் அண்மையில் மூன்றாவது முறையாக குறிப்பிட்டுள்ளார். இன்றைய சந்திப்பிலும் அதனை டிரம்ப் முன்வைப்பார். ஆனால் டிரம்ப்புக்கு உரிய விதத்தில் இந்தியாவின்  நிலைப்பாட்டை பிரதமர் மோடி தெளிவுபடுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பிரதமர் மோடி- டிரம்ப் பேச்சுவார்த்தையின் போது ஈரானுடன் ஒப்பந்தம் செய்வது, ஜி 7 நாடுகளில் ரஷ்யாவை இணைப்பது குறித்தும் ஆலோசனை  நடைபெற உள்ளது. சுற்றுச்சூழல், டிஜிட்டல் பொருளாதாரம், சீனா வர்த்தகம் போன்றவற்றுடன் இவை விவாதிக்கப்பட உள்ளன. இந்த ஆண்டில் இந்த இரு தலைவர்களும் சந்திப்பது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: