தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருகளுக்கு செல்லும் சிறப்பு பஸ்கள் முன்பதிவு நாளை தொடக்கம்

சென்னை: தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 27-ம் தேதி வருகிறது. எனவே தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்பவர்கள் அக்டோபர் 25-ம் தேதி சென்றுவிடுவார்கள். தீபாவளி பண்டிகைக்காக தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவு முடிந்துவிட்டது. மேலும் தேவைக்கு ஏற்ப சிறப்பு ரெயில்களை இயக்கவும் தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது. ஆனால் சிறப்பு ரெயில்களிலும் முன்பதிவு உடனே முடிந்து விடும் என்பதால் பெரும்பாலானோர் தனியார் ஆம்னி பஸ்கள் மற்றும் அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்வார்கள். சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில், கோவை, திருப்பூர், சேலம், திருப்பதி, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் 1200 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் தினமும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். இந்த பஸ்கள் சொகுசு மற்றும் குளிர்சாதன பஸ்கள் ஆகும்.

அரசு விரைவு பஸ்களில் 60 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அதன்படி தீபாவளி பண்டிகைக்காக அக்டோபர் 25-ம் தேதி சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கு நாளை (27-ம் தேதி) முன்பதிவு தொடங்குகிறது. அரசு பஸ்களில் பயணம் செய்ய 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி உள்ளது என அரசு போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் முன்பதிவு செய்வார்கள். அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் படுக்கை வசதி, குளிர்சாதன வசதி கொண்ட பஸ்கள், சொகுசு பஸ்கள் அதிக அளவில் உள்ளன. www.tnstc.in, www.redbus.in, www.paytm.com ஆகிய இணைய தளங்கள் வழியாக பொதுமக்கள் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையின் போது எவ்வளவு சிறப்பு பஸ்கள் இயக்குவது என்பது குறித்து அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர்களுடன் ஆலோசனை கூட்டம் அடுத்த 2 வாரங்களில் நடக்க உள்ளது. அதன்பிறகு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது தொடர்பாக அரசு அறிவிக்கும். போதிய அளவில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என கூறப்படுகிறது. தீபாவளி பண்டிகை நாட்களில் சென்னை, புறநகர் பகுதிகளில் அதிக போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்பதால் அதை குறைப்பதற்காக திட்டமிட்டு பஸ்களை இயக்குவது பற்றி போலீசாருடன் ஆலோசனை நடத்த உள்ளோம் என தெரிவித்து்ள்ளனர். அதன் அடிப்படையில் போக்கு வரத்து நெரிசலை குறைக்க முடிவு செய்துள்ளோம் என கூறியுள்ளனர்.

Related Stories: