×

வேதாரண்யத்தில் தொடர்ந்து பதற்றம்: அரசு சார்பில் இடிக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக புதிய சிலை நிறுவப்பட்டது

வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் இடிக்கப்பட்ட சிலைக்கு பதிலாக அரசு சார்பில் புதிய அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் பாண்டியன் என்பவர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் காரில்  சென்றுகொண்டிருந்த போது அப்பகுதியைச் சேர்ந்த சிலர் காரை வழிமறித்துள்ளனர். முன்விரோதம் காரணமாக பாண்டியனை அவர்கள் தாக்கியதாகக் கூறப்படும் நிலையில், நேற்று மாலை இருதரப்பினரிடையே திடீரென மோதல் ஏற்பட்டது.  அப்போது ஏற்பட்ட கலவரத்தில் காவல் நிலையம் எதிரே நின்றிருந்த ஜீப்பை அடித்து உடைத்து நொறுக்கி தீவைத்து கொளுத்தினர்.

பின்னர் காவல் நிலையம் முன்பு கலவரக்காரர்கள் 100க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தில் கல்வீசி தாக்குதல் நடத்தினர். அப்போது அங்கு இரு பெண் காவலர்கள் மட்டுமே இருந்தனர். கலவரத்தை அறிந்தவுடன் அவர்கள் பயந்துபோய்  உள்ளே சென்றுவிட்டனர். அப்போது மற்றொரு தரப்பினர் காவல் நிலையம் அருகே இருந்த அம்பேத்கர் சிலையை முற்றிலும் உடைத்தனர். இதையடுத்து இரு தரப்பினரும் வீசிக்கொண்ட கல்வீச்சில் பாபுராஜன் (25), ராமச்சந்திரன் (24), சரத்குமார்  (28) ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதை அறிந்த மற்றொரு தரப்பினர் அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு கண்ணாடியை கல்வீசி தாக்கி சேதப்படுத்தினர். மேலும் அங்குள்ள ஒரு டூவீலரையும் அடித்து நொறுக்கினர். இந்த தாக்குதல் சம்பவத்தில் போலீசாருக்கும் காயம்  ஏற்பட்டது. கலவரத்தால் வேதாரண்யம் பகுதியில் உடனடியாக கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டது. பஸ்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. தகவல் அறிந்த எஸ்பி ராஜசேகரன், தஞ்சை சரக டிஐஜி லோகநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு  வந்து, கல்வீசி தாக்கப்பட்ட காவல் நிலையம், உடைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை மற்றும் அரசு மருத்துமனை ஆகிய இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்தினர். பின்னர் காவல் நிலையம், சிலை உடைக்கப்பட்ட இடம், வேதாரண்யம் அரசு  மருத்துமனை உள்ள இடங்களில் 100க்கும் மேற்பட்ட போலீசாரை பாதுகாப்புக்கு ஈடுபடுத்தினர்.

இதற்கிடையே, அம்பேத்கர் சிலை உடைப்பை கண்டித்து காரைக்கால்-நாகை மெயின் சாலையில் மறியல் போராட்டம் நடந்தது. இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், இடிக்கப்பட்ட சிலைக்கு பதிலாக தமிழக  அரசு சார்பில் புதிய அம்பேத்கர் சிலை இன்று காலை நிறுவப்பட்டது.

திருமாவளவன் பேட்டி:

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலையை உடைத்தவர்களை குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன்  தெரிவித்துள்ளார். தமிழகம் சாதி பயங்கரவாதிகளின் வேட்டைக்காடாக மாறி விடாமல் தடுக்க அனைவரும் குரலெழுப்ப வேண்டும் என்றும் கூறினார்.


Tags : Statue of Ambedkar, new statue of Vedaranyam
× RELATED குழந்தைகளுக்கு எதிரான குற்ற...