அரியலூரில் ஆள் மாறாட்டம் செய்து காவலர் தேர்வு எழுதியவர் உட்பட 3 பேர் கைது

அரியலூர்:  தமிழகம் முழுவதும் காவலர் பணிக்கான எழுத்துத்தேர்வு நேற்று நடந்தது. அரியலூர் மாவட்டம் தத்தனூரில் உள்ள மீனாட்சி ராமசாமி கல்லூரியில் நடந்த எழுத்துத்தேர்வில்நேற்று  2972 பேர் பங்கேற்று தேர்வெழுதினர். திருச்சி மண்டல சரக காவல் துணைத்தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் தேர்வு நடந்த இடத்தில் ஆய்வு செய்தனர். அப்போது கன்னியாகுமரி மாவட்டம் கல்லுக்குட்டம் கிராமத்தை சேர்ந்த தேவபிரகாஷ் (23) என்பவருக்கு பதிலாக, கடலூர் மாவட்டம் சி அரசூரை சேர்ந்த ரகுபதி (33) என்பவர் தேர்வு எழுதியதை போலீசார் கண்டறிந்தனர்.  இதையடுத்து தேர்வெழுதிய ரகுபதி, தேர்வெழுத சொன்ன தேவபிரகாஷ் (23) மற்றும் இதற்கு உதவியாக இருந்த தேவ்பிரகாஷ் அண்ணன் சந்தோஷ் (32) ஆகியோரை உடையார்பாளையம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பிஎஸ்என்ஏ கல்லூரியில் காவலர் தேர்வு எழுத வந்த சரவணக்குமார் மற்றும் புவனேஸ்வரி ஆகியோர் வைத்திருந்தது போலி ஹால் டிக்கெட் என தெரியவந்தது. இது ெதாடர்பாக அய்யலூரில் கம்ப்யூட்டர் மையம் நடத்திவரும் டி.கல்லுப்பட்டியை சேர்ந்த சரவணக்குமாரை போலீசார் கைது செய்தனர்.

போலீஸ் தேர்வு எழுதிய ரவுடி:  மதுரை  மாவட்டம் மேலூரில் அழகர்கோவில் - மேலூர்  மெயின் ரோட்டில் கிடாரிப்பட்டியில் உள்ள ஒரு தனியார் இன்ஜினீயரிங்  கல்லூரியில் நடந்த தேர்வில் பிரபல வழிப்பறி கொள்ளையன், மதுரையை சேர்ந்த விஜயகாந்த்  (22) எழுதுவதாக மதுரை புறநகர் தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல்  கிடைத்தது. அதன்பேரில், தனிப்பிரிவு போலீசார் அங்கு சென்றனர். போலீஸ் தேர்வு எழுதி விட்டு வெளியே வந்த, ரவுடியை  கையும், களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர். அந்த வாலிபருக்கும், அவர்  வைத்திருந்த ஹால்டிக்கெட்டில் உள்ள போட்டோவுக்கும் வித்தியாசம் இருந்தது. இதனையடுத்து,  அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில், இவர் மீது, மதுரை நகரில் ஒரு  பெண்ணிடம் 7 பவுன் செயின் வழிப்பறி வழக்கு நிலுவையில் உள்ளதும், இதில் ஏற்கனவே போலீஸ் பிடியில் சிக்கிய விஜயகாந்த் மீது மேலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இவரிடம் தனிப்பிரிவு  போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: