×

முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: வெஸ்ட் இண்டிஸ் அணியை 318 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

ஆன்டிகுவா: முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டிஸ் அணியை 318 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. நார்த்சவுண்டு, சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசியது. இந்தியா முதல் இன்னிங்சில் 297 ரன் குவித்து ஆல் அவுட்டானது (96.4 ஓவர்). கே.எல்.ராகுல் 44, அஜிங்க்யா ரகானே 81, ஜடேஜா 58 ரன் விளாசினர். வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 222 ரன்னுக்கு சுருண்டது (74.2 ஓவர்). சேஸ் 48, கேப்டன் ஹோல்டர் 39, ஹெட்மயர் 35 ரன் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் இஷாந்த் ஷர்மா 17 ஓவரில் 5 மெய்டன் உட்பட 43 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். ஷமி, ஜடேஜா தலா 2, பூம்ரா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 75 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 3ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 185 ரன் எடுத்திருந்தது. கேப்டன் கோஹ்லி 51 ரன், ரகானே 53 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். கோஹ்லி 51 ரன்னிலேயே (113 பந்து, 2 பவுண்டரி) வெளியேறினார். அடுத்து ரகானேவுடன் ஹனுமா விஹாரி இணைந்தார். இருவரும் பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். உணவு இடைவேளையின் போது இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 287 ரன் எடுத்திருந்தது. அபாரமாக ஆடிய ரஹானே தனது 10-வது சதத்தை எட்டினார். 2 ஆண்டுகளுக்கு பிறகு அவர் அடித்த முதல் சதம் இதுவாகும். ரஹானே 102 ரன்னில் கேட்ச் ஆனார். 7 ரன்னில் கன்னி சதத்தை நழுவ விட்ட விஹாரி 93 ரன்களில் (10 பவுண்டரி, ஒரு சிக்சர்) வீழ்ந்தார். ரிஷாப் பண்ட் 7 ரன்னில் ஏமாற்றம் அளித்தார்.

இந்திய அணி 2-வது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 343 ரன்கள் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீசுக்கு 419 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. அணியின் சார்பில் முதலாவதாக களமிறங்கிய பிராத் வெயிட் 1 ரன்னும், ஜான் சேப்பல் 7 ரன்னும் எடுத்து பும்ரா பந்து வீச்சில் நடையை கட்டினர். இதைத்தொடர்ந்து பும்ரா மற்றும் இஷாந்த் சர்மா பந்து வீச்சில் மிரட்டினர். இதனால் வெஸ்ட் இண்டிஸ் அணியில் அடுத்து களமிறங்கிய புரூக்ஸ் 2 ரன்னும், ஹெட்மயர் 1 ரன்னும், டேரன் பிராவோ 2 ரன்னும், ஷாய் ஹோப் 2 ரன்னும், கேப்டன் ஜேசன் ஹோல்டர் 8 ரன்னும் எடுத்து மளமள வென தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இந்திய பவுலர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வந்தவேகத்தில் வெஸ்ட் இண்டிஸ் அணி வீரர்கள் வெளியேறினர். இதைதொடர்ந்து களமிறங்கிய ரோஸ்டன் சேஸ் 12 ரன்களும், கேப்ரியல் ரன் ஏதும் எடுக்காமலும் முகமது சமி பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர். அடுத்ததாக கேமர் ரோச் மற்றும் கம்மின்ஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடியில் கேமர் ரோச் அதிரடி காட்டினார். இதனால் அணியின் ஸ்கோர் ஒரளவு உயர்ந்தநிலையில் கேமர் ரோச் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். கம்மின்ஸ் 19 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இறுதியில் வெஸ்ட் இண்டிஸ் அணி 26.5 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 100 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேமர் ரோச் 38 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக அபாராமாக பந்து வீசிய பும்ரா 7 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளும், முகமது சமி 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். இதன்படி இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டிஸ் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

Tags : Cricket match, West Indies team, 318 runs, India
× RELATED ராஜஸ்தானில் இருந்து அசாமுக்கு சென்ற...