×

கர்நாடக பேப்பர் ரோலில் டிக்கெட் வழங்கிய அரசு பஸ் கண்டக்டருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்: தட்டுப்பாடு குறித்து தொழிற்சங்கம் புகார்

வேலூர்: கர்நாடக போக்குவரத்துக்கழக பேப்பர் ரோலில் டிக்கெட் வழங்கியது தொடர்பாக விளக்கம் கேட்டு அரசு பஸ் கண்டக்டருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த ஒருவர் வேலூரில் இருந்து திருப்பத்தூருக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்சில் கடந்த 23ம் தேதி பயணம் செய்தார். அப்போது கண்டக்டர், அவரிடம் ₹82 கட்டணத்துக்கு இயந்திரம் மூலம்  பிரின்ட் செய்த டிக்கெட் வழங்கினார். அந்த டிக்கெட் ரோலின் இருபுறமும் கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் ‘கே.ஆர்.எஸ்.டி.சி’ என அச்சிடப்பட்டு இருந்தது. மேலும், கர்நாடக அரசு சாலை போக்குவரத்து கழக முத்திரையும் இருந்தது.  இதுகுறித்த செய்தி படத்துடன் நேற்றைய ‘தினகரன்’ நாளிதழில் வெளியானது.

இதையடுத்து, வேலூர் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ‘சேலத்தில் இருந்து வேலூர் வந்த அரசு பஸ்சின் கண்டக்டர், பேப்பர் ரோல் காலியானதால், சேலம் பஸ் நிலையத்தில் கர்நாடக அரசு பஸ் கண்டக்டரிடம்  ரோல் வாங்கி பயன்படுத்தியது தெரிய வந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட கண்டக்டரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட உள்ளது’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.இதுபோன்ற நிலைக்கு அரசு போக்குவரத்துக்கழகம் தான் காரணம். தமிழகத்தில் இயக்கப்படும் அரசு பஸ்களில் பேப்பர் ரோல் வழங்குவதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தொழிற்சங்கத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதுகுறித்து தொழிற்சங்கத்தினர் கூறியதாவது: ‘தமிழகத்தில் இயக்கப்படும் அரசு பஸ்களில் ஒரு நாளுக்கு 2 முதல் 3 பேப்பர் ரோல்கள் வழங்கப்பட வேண்டும். ஆனால் ஒரு நாளைக்கு ஒரு பேப்பர் ரோல் மட்டுமே வழங்கப்படுகிறது. ஒரு பேப்பர்  ரோலில் 250 டிக்கெட் வழங்கலாம். விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் அதிகளவில் பயணிகள் வருவதால், டிக்கெட் வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் அந்தந்த பஸ் கண்டக்டர்கள் அருகில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படும் தமிழக அரசு முத்திரை இல்லாத பேப்பர் ரோல் அல்லது பிற மாநிலங்களின் முத்திரை உள்ள பேப்பர் ரோல் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ஒரு  பேப்பர் ரோல் ரூ.10 மட்டுமே, ஆனால் போக்குவரத்து கழக அதிகாரிகள் பேப்பர் ரோல் வழங்குவதில் தட்டுப்பாடு உள்ளதாக கூறி தினந்தோறும் ஒரு பேப்பர் ரோல் மட்டுமே வழங்குகின்றனர்’ என்றனர்.

கடந்த ஆண்டு ஆந்திரா, இந்த ஆண்டு கர்நாடகா

வேலூர் மாவட்டத்தில் இருந்து அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டும் ஆம்பூரில் இருந்து வேலூருக்கு வந்த தமிழக அரசு பஸ்சில் வழங்கப்பட்ட டிக்கெட்டில்  ஆந்திர அரசு போக்குவரத்து கழக முத்திரை என அச்சிடப்பட்டு இருந்தது. அப்போது சம்பந்தப்பட்ட கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது கர்நாடக மாநில அரசு போக்குவரத்து கழக முத்திரை அச்சிடப்பட்ட டிக்கெட் வழங்கப்பட்ட  சம்பவம் தொடர்பாக கண்டக்டர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Govt issues bus ticket to Karnataka
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...