×

திமுக இளைஞர் அணியில் உறுப்பினராக சேர வயது வரம்பில் மாற்றம் 2 மாதத்தில் 30 லட்சம் இளைஞர்களை சேர்க்க இலக்கு...உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: திமுக இளைஞர் அணியில் உறுப்பினராக சேர வயது வரம்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 மாதத்தில் 30 லட்சம் இளைஞர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்து உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.திமுக இளைஞர் அணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் சென்னை கிண்டியில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார்.  இளைஞரணி துணை செயலாளர்கள் ஆர்.டி.சேகர், தாயகம் கவி, அசன் முகமது ஜின்னா, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பைந்தமிழ் பாரி, எஸ்.ஜோயல், ஆ.துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை தெற்கு மாவட்ட இளைஞரணி  அமைப்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா வரவேற்றார். கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணியினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
n  நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி, வேலூர் உள்பட 39 தொகுதிகளில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை வரலாறு காணாத வகையில் வெற்றி பெற வைத்த திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின், கூட்டணி கட்சி தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், இளைஞரணியினர் ஆகியோருக்கு வாழ்த்துகளையும், வாக்காளர்களுக்கு நன்றியும் தெரிவித்துக்கொள்கிறோம்.
n மார்ச் 1ம் தேதி இளைஞர் எழுச்சி நாளான திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக இளைஞர்களை ஊக்குவிக்க மாநில, மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகளை இளைஞரணியின் சார்பில் நடத்தப்படும்.

n  வரும் செப்டம்பர் 14ம் தேதி முதல் நவம்பர் 14ம் தேதிக்குள்ளான 2 மாதங்களுக்குள் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 10 ஆயிரம் பேருக்கு குறையாமல், ஒட்டுமொத்தமாக 30 லட்சம் இளைஞர்களை உறுப்பினர்களாக  சேர்க்க வேண்டும்.
n 15 முதல் 30 வயது உள்ளவர்கள் இளைஞரணியில் உறுப்பினராகலாம் என்ற விதியை மாற்றி, 18 முதல் 35 வயதுள்ள இளைஞர்களை உறுப்பினர்களாக சேர்க்கலாம் என்று தலைமைக் கழகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.  
n இளைஞரணி அமைப்பு மண்டல வாரியாக பிரிக்கப்பட்டு நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுகள் செய்யப்படும். அதைத்தொடர்ந்து 3 மாதங்களுக்குள் ஒரு மண்டல மாநாடு நடத்தப்படும். அனைத்து மண்டல மாநாடுகளும் முடிந்த  பின்னர், மிகப்பெரிய அளவில் இளைஞர் அணி மாநில மாநாடு நடத்தப்படும்.
n கருணாநிதியின் கனவு திட்டமான சமச்சீர் கல்வியை அழிக்கும் வகையிலும், கிராமப்புற பள்ளிகளை மூடி ஏழை-எளிய-நடுத்தர மாணவர்களின் கல்விக் கனவை சிதைக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட தேசிய கல்விக்கொள்கை வரையறையை  கண்டிக்கிறோம் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஜனநாயகத்தை பாஜக கேலிக்குள்ளாக்கி வருகிறது

திமுக இளைஞர் அணி மாவட்ட, மாநகர, மாநில, அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கூட்டம் ெசன்னையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: நாம் ஆட்சியில் இல்லை என்ற ஒரு குறையைத் தவிர மற்றபடி நம் பணியை அழகாக நிறைவாக செய்து வருகிறோம். ஆனால் இன்று, நாம் ஆட்சிக்கு வரவேண்டியது என்பதை தாண்டி நாடே ஆபத்தான ஒரு சூழலில், அதாவது இருண்ட  காலக்கட்டத்தில் உள்ளது. ஒரே நாடு, ஒரே கட்சி என்ற அடாவடி அரசியலை மத்தியில் ஆளும் பாஜக அரசு செய்து வருகிறது. தரம் தாழ்ந்த அரசியலின் மூலம் மற்ற கட்சியினர் ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு தொடர்ந்து குடைச்சலை  கொடுத்து வருகிறது. கர்நாடகாவில் ஆட்சியையே கலைய வைத்தது. மேற்கு வங்கம், புதுச்சேரி உள்பட பல மாநிலங்களை சுயமாக இயங்கவிடாமல் தொல்லைகள் கொடுத்து வருகிறது.

இப்படி கூட்டாட்சி தத்துவத்தை காலில் போட்டு மிதித்து, ஜனநாயகத்தை கேலிக்குள்ளாக்கும் வகையில் பாஜக தொடர்ந்து செயல்படுகிறது. ஆனாலும் தமிழ்நாட்டை மட்டும் அவர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. ‘எனக்கு கிடைக்காதது  யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று அழிக்க நினைப்பது போல், தனக்கு மக்கள் ஆதரவு இல்லாத தமிழகத்தை சீரழிக்க பாஜக முடிவு செய்துவிட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Age change to join DMK youth team aims to add 30 lakh youth in 2 months ... Meeting chaired by Udayanidhi Stalin
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...