அரசியல் லாபம் தான் அரசின் நோக்கம்: கிறிஸ்துதாஸ் காந்தி, முன்னாள் கூடுதல் தலைமை செயலாளர்

புதிதாக மாவட்டங்கள் பிரிப்பதால் மக்களுக்கு பலன் இருக்காது. நிர்வாக காரணமாக பிரிப்பதாக அரசு கூறுகிறது. பரந்த இடத்தில் கலெக்டராக இருப்பதால் எல்லா இடத்தையும் கட்டுக்குள் வைத்திருக்க முடியாது. அதனால் சின்ன, சின்ன  மாவட்டங்களாக பிரித்து அதை என்னுடைய கட்சி மாவட்ட செயலாளர்களை, ஒன்றிய செயலாளர்களை மாவட்ட கலெக்டருடன் உறவாட விடுவது. எல்லா விஷயங்களையும் இவர்களை வைத்து நிறைவேற்றி கொள்வது, அப்படின்னு கணக்கு  போட்டுள்ளனர். மக்களுக்கு இதனால், என்ன நன்மை இருக்கிறது? அரசியல் லாபத்துக்கு தான் இந்த மாவட்ட பிரிப்புகள். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்களுக்கு என்ன வேலை இருக்கிறது? மக்களுக்கு நலத்திட்டங்கள் வேண்டுமென்றால்  விஓவிடம் சென்றோ, பஞ்சாயத்து தலைவரிடம் சென்றோ, தாலுகா அலுவலகம் சென்றோ வாங்கி கொள்ளலாம்.  குறிப்பாக, சத்துணவு வேலைக்கு ஊழியர்கள் கலெக்டர்கள் மூலமாக நியமிக்கப்படுகின்றனர். ஏன் ஒரு சத்துணைவு ஊழியரை பஞ்சாயத்து தலைவரோ, ஒன்றிய தலைவரோ ஊழியர்களை நியமிக்க ஆணை வழங்கலாம்.

 ஆனால், ஒன்றியம்  மூலமாக கிடைக்க வேண்டுமென்றால் கிடைக்க வேண்டிய வரவு சரியாக வராது என்பதால் தான் கலெக்டர் மூலமாக ஆணை வழங்கப்படுகிறது. அவர்களிடம் ஒரு லிஸ்ட் போட்டு அந்த பெயருக்கு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று கூற  முடியும். அவ்வாறு ஆணை பிறப்பிக்காத கலெக்டர்களை  தூக்கி விட முடியும். ஆனால், பஞ்சாயத்து தலைவரையோ, ஒன்றிய தலைவரையோ தூக்க முடியாது. அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்படுபவர்கள். இது தான்  அவர்களின் நோக்கமாக உள்ளது. மாவட்ட கலெக்டர்களுக்கு கல்வி, சுகாதாரம், தொழில் முனைவு, வேளாண்மை இந்த மாதிரியான மக்கள் சார்ந்த துறைகளுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லை. இந்த துறை சம்பந்தமாக அவர்கள் எந்த ஒரு அறிக்கையும் தர  வேண்டியதில்லை. ஒரு மாவட்டத்திற்கு டிஆர்ஓ, வேளாண் இணை இயக்குனர், நெடுஞ்சாலையில் கோட்ட பொறியாளர், பொதுப்பணித்துறையில் செயற்பொறியாளர்கள் இருக்கின்றனர். அவர்கள் மக்கள் நலன் சார்ந்த திட்ட அறிக்கை  தயாரிப்பார்கள். ஆனால், கலெக்டர்கள் அப்படி எதுவும் செய்வதில்லை.

மக்கள் ஏதாவது பேசினார்கள் என்றால் அவர்களை அடக்கி வைக்க வேண்டும். அதிகமாக பேசினால் வாயடைக்க வேண்டும். இப்போது மக்களுக்கு விழிப்புணர்வு வந்து விட்டது. அவர்கள் உரிமைகளை பற்றி பேசுகிறார்கள். அதை கண்காணித்து  நடவடிக்கை எடுப்பது கலெக்டர் தான்; மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரம் திங்கள் கிழமையில் குறை தீர் முகாம் நடத்தப்படுகிறது. 1970ல் இருந்து இந்த குறை தீர் முகாம் நடக்கிறது. இவ்வளவு ஆண்டுகளாக மக்களின்  குறை தீராமல் உள்ளது. 50 வருடமாக குறை இருக்கிறது என்றால் மாவட்ட கலெக்டர் குறை தீர் முகாமல் பயன் இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகம் உள்ளது. அரசாங்கத்திற்கு வரும் வருவாயில் ஊழியர்களுக்கு சம்பளத்திற்கு அதிக செலவு செய்யப்படுவதாக அமைச்சர் ஒருவர் கூறினார். அவர்களே இப்போது மாவட்டத்தை பிரித்து மக்கள் பணத்தை வீணாக்குகின்றனர்.

Related Stories: