×

திருப்போரூர் அருகே மானாம்பதியில் பயங்கரம் பிறந்த நாள் விழாவில் குண்டு வெடிப்பு: வாலிபர் பலி...5 பேர் படுகாயம்

சென்னை: திருப்போரூர் அருகே மானாம்பதியில் நேற்று, பிறந்த நாள் கொண்டாடத்தின் போது வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலியானார். 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அப்பகுதியில் இருந்து வெடிகுண்டு சிதறல்கள்  மீட்கப்பட்டுள்ளன. சென்னை கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் அருகே குண்டுமணிச்சேரியை சேர்ந்தவர் சூர்யா (22). நெல் அறுவை இயந்திர ஆபரேட்டர். இவரது தாய்மாமா திருப்போரூர் அருகே மானாம்பதியை சேர்ந்த குமார். 3 நாள் விடுமுறைக்காக சூர்யா, தனது  தாய்மாமா குமார் வீட்டுக்கு சென்றார்.இந்நிலையில், நேற்று பிற்பகல் 3 மணியளவில் சூர்யா, குமார் வீட்டின் அருகே வசிக்கும் திலீப் (22), திருமால் (24), யுவராஜ் (27), ஜெயராமன் (26), விசுவநாதன் (24) ஆகியோர் மானாம்பதியில் உள்ள கங்கை அம்மன் கோயில் பின்புறம் அமர்ந்து  பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, தீலிப்பின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாட அவர்கள் முடிவு செய்தனர். இதற்காக ஸ்பெஷலாக கேக் ஆர்டர் செய்து வரவழைத்துள்ளனர். பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு பின், நண்பர்கள் அங்கு  அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, மர்ம பொருள் ஒன்று வெடித்தது.

அதிலிருந்து வெளியேறிய இரும்பு துகள்கள் 6 பேரின் உடல்களை துளைத்தது. இதில் சூர்யா, திலீப், திருமால், யுவராஜ் ஆகியோர் படுகாயமடைந்தனர். ஜெயராமன், விசுவநாதனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களின் அலறல் சத்தம்  கேட்டு, அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர். அங்கு ரத்த காயத்துடன் இருந்த அனைவரையும் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சூர்யா பரிதாபமாக இறந்தார். திலீப்,  திருமால், யுவராஜ், விசுவநாதன் ஆகியோர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஜெயராமனை மட்டும் அவரது உறவினர்கள் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

தகவலறிந்து காஞ்சிபுரம் எஸ்பி கண்ணன், மாமல்லபுரம் ஏஎஸ்பி பத்ரி நாராயணன், வெடி சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு சென்று, பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், சென்னையிலிருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ,  அப்பகுதியில் சோதனை நடத்தினர். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, அப்பகுதி முழுவதும் மோப்பம் பிடித்தது.  மேலும் கோயிலின் பல்வேறு பகுதிகளில் இரும்பு துகள் தாக்கியதில் அப்பகுதியில் துளைகள் காணப்பட்டன. இந்த சம்பவம்  தொடர்பாக கிராம மக்களை அழைத்து எஸ்பி விசாரித்தார்.

வெடிகுண்டு அங்கு எப்படி  வந்தது என்பது மர்மமாக உள்ளது. வெடிகுண்டு சிதறல்களின் உள்ள குறியீடுகளை பார்க்கும் போது ராணுவத்தினர் பயன்படுத்தும் குண்டு வகையை சேர்ந்ததாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.  தமிழகத்தில் தற்போது தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள நிலையில்  குண்டு வெடித்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தீவீரவாதிகளின் சதி வேலையா என்பது உட்பட பல்வேறு கோணங்களில் போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Blast at a mansion near Tirupporur
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...