மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக மின்சார வாரியத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், பணி நிரந்தரம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பலகட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்  ஒருபகுதியாக நேற்று காலை சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்க தலைவர் முத்துப்பாண்டி தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர் நாகராஜ் மற்றும் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இப்போராட்டம் நாளை (27ம் தேதி) வரை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகையில், ‘கேங்மேன் பணியில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். தினக்கூலியாக ரூ.380 வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அரசு  நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகிறோம். இதில் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அடுத்தக்கட்டமாக காலவரையற்ற போராட்டம் நடத்துவோம்,’ என்றனர்.

Related Stories: