வெளிநாட்டு பணம் மாற்றுவது போல் பல லட்சம் கொள்ளை ஈரானிய கொள்ளையர்கள் 2 பேர் கைது: விமானத்தில் குழுவாக வந்து சென்னையில் கைவரிசை

சென்னை: பணம் பரிமாற்ற நிறுவனங்களில் வெளிநாட்டு பணம் மாற்றுவது போல் நடித்து, பல லட்சம் பணத்தை நூதன முறையில் கொள்ளையடித்து வந்த ஈரானிய கொள்ளையர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம்  இருந்து வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்தவர் ஜெயின் ஷா(38). இவர் இதே பகுதியில் வெளிநாட்டு பணம் மாற்றும் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 21ம் தேதி இவரது பணம் மாற்றும் நிறுவனத்துக்கு வந்த 2 பேர், வெளிநாட்டு பணம்  மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர். பிறகு 2 பேரும் சிறிது நேரத்தில் வெளியே சென்றனர். அதைதொடர்ந்து இரவு நிறுவனத்தை மூடுவதற்கு முன்பு கணக்குகளை ஜெயின் ஷா சரிபார்த்தார். அப்போது ரூ.35 ஆயிரம் பணம் குறைந்தது.  உடனே தனது நிறுவனத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்த போது, வெளிநாட்டு பணம் மாற்ற வந்த 2 பேர் கவனத்தை திசை திருப்பி பணத்தை நூதன முறையில் திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

அதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெயின் ஷா, உடனே சென்னையில் உள்ள ெவளிநாட்டு பணம் பரிமாற்ற நிறுவனம் வைத்துள்ள அனைவருக்கும் வாட்ஸ் அப் மூலம் 2 நபர்களின் வீடியோ காட்சிளை அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில்,  நேற்று முன்தினம் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மற்றொரு வெளிநாட்டு பணம் பரிமாற்றம் செய்யும் நிறுவனத்தில் 3 பேர் தங்களிடம் உள்ள அமெரிக்கா டாலர், சிங்கப்பூர்  பணம் ஆகியவற்றை மாற்ற வந்துள்ளனர். அப்போது  நிறுவனத்தின் உரிமையாளர் தனது நண்பர் ஜெயின் ஷா அனுப்பிய வீடியோ காட்சிகளை ைவத்து பணம் மாற்ற வந்த நபர்கள் யாரேனும் உள்ளனரா என்று ஒப்பிட்டு பார்த்துள்ளார். அப்போது ஜெயின்ஷாவிடம் ரூ.35 ஆயிரம் பணத்தை நூதன  முறையில் திருடி சென்ற நபர்களில் ஒருவன் இருந்தது தெரியவந்தது.

உடனே அந்த கடையின் உரிமையாளர், சம்பவம் குறித்து ஜெயின் ஷாவிடம் தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி ஜெயின் ஷா கொள்ளையர்கள் குறித்து ஆயிரம் விளக்கு போலீசாருக்கு தகவல் அறித்தார். அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு  போலீசார் வந்தனர். இதை பார்த்த 3 பேரும் தப்பி ஓட முயன்றனர். அப்போது 2 பேரை போலீசார் மற்றும் கடையின் ஊழியர்கள் துரத்தி ெசன்று பிடித்தனர்.

பின்னர் 2 பேரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து ெசன்று விசாரணை நடத்தினர். அப்போது, ஈரான் நாட்டை சேர்ந்த மோசன் இலாசி(34), அமீர் அலி(35) என தெரியவந்தது. ஈரானிய கொள்ளையர்களான இவர்கள் குழுவாக ஈரான்  நாட்டில் இருந்து கடந்த மாதம் விமானம் மூலம் டெல்லி வந்துள்ளனர். பிறகு டெல்லியில் இருந்து ரயில் மூலம் சென்னை வந்து ஓட்டலில் தங்கி வெளிநாட்டு பணம் மாற்றுவது போல், பணபரிமாற்றம் செய்யும் நிறுவனங்களில் ஊழியர்களை  திசை திருப்பி பல லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கைது செய்யப்பட்ட 2 பேரிடம் ஈரான் நாட்டில் இருந்து  எத்தனை பேர்  சென்னை வந்துள்ளனர். அவர்கள் எங்கு தங்கி உள்ளனர் என்பது குறித்து போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய மற்றொரு ஈரானிய கொள்ளையன் ஜாஹமை போலீசார் தேடி வருகின்றனர்.  பெரும்பாலும் ஈரானிய கொள்ளையர்கள் சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் தற்போது மாநகரம் முழுவதும் சிசிடிவி கேமரா அமைக்கப்பட்ட பிறகு, அவர்களால் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட  முடியவில்லை. இதனால் தங்களின் தொழிலை மாற்றி தற்போது வெளிநாட்டு பணம் மாற்றுவது போல் நூதன முறையில் பல லட்சம் பணம் கொள்ளையடித்து இருப்பது விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Related Stories: