கிருஷ்ணா நீர் வரத்து எதிரொலி செம்பரம்பாக்கம் ஏரியில் பொதுப்பணி துறை அதிகாரிகள் ஆய்வு

சென்னை: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு செம்பரம்பாக்கம் ஏரியில் பொதுப் பணித்துறை அதிகாரிகள் மதகு மற்றும் கரைகளை நேற்று ஆய்வு நடத்தினர்.தமிழக அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா நதி நீர் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில், ஆந்திரா மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் ஊத்துக்கோட்டை ஜீரோ பயிண்ட்  வழியாக தமிழகம் வந்தடையும். அங்கிருந்து, பூண்டி ஏரியில் தேக்கி வைக்கப்பட்ட நீர், சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளுக்கு அனுப்பப்படும்.

இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகள் மற்றும் கரைகள் பலமாக உள்ளனவா என்பதை தமிழக பொதுப்பணி துறையின்  முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி நேற்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது, செம்பரம்பாக்கம்  ஏரியில் உள்ள 5 கண் மதகு, 19 கண் மதகுகளில் உள்ள ஷட்டர்கள் நன்றாக உள்ளதா? முறையாக இயங்குகிறதா?  என்பதை சோதனை செய்தார். இதை தொடர்ந்து, ஏரியில் உள்ள நீர் உள்வாங்கி கோபுரத்தை ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், கிருஷ்ணா நதி நீர் தமிழகம் வரவிருப்பதையொட்டி முன் எச்சரிக்கையாக ஆய்வு மேற்கொண்டதாக தெரிவித்தார்.

Related Stories: