சாலையோரங்களில் மழை நீர் சேகரிப்பு: முதன்முதலாக இசிஆர் சாலையில் நடைமுறை நெடுஞ்சாலைத்துறை தகவல்

சென்னை: நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலையோரங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முதன்முதலாக இசிஆர் சாலையில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு  வருகிறது என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.நிலத்தடி நீர் பயன்பாடு அதிகரித்ததன் விளைவாக தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. இதனால், நிலத்தடி நீர் 200 அடி முதல் 400 அடி வரை அதளபாதாளத்திற்கு சென்று விட்டது.  இந்த நிலையில் நிலத்தடி நீர் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காவிட்டால், தொடர்ந்து நிலத்தடி நீரில் கடல் நீர் உட்புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு வைப்பது குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து தமிழக அரசு அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு  அமைக்கப்பட்டு வருகிறது.

அதே போன்று நெடுஞ்சாலைகளிலும் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை செயலாளர் பிரபாகர் உடன் பொறியாளர்கள் ஆலோசனை நடத்தினர். அதன்பேரில் தமிழகம்  முழுவதும் உள்ள சாலைகளின் இருபுறங்களில் மழை நீர் சேகரிப்பு வைப்பது தொடர்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் முதன்முறையாக கிழக்கு கடற்கரை சாலையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சாலைகளில் இரண்டு புறங்களிலும் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கப்படுகிறது. இதன் மூலம் சாலைகளில் தண்ணீர்  தேங்குவதை தடுப்பது மட்டுமின்றி மழை நீர் சேகரித்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த முடியும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறும் போது, தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் 62 ஆயிரம் கி.மீ நீள சாலைகள் உள்ளன. இந்த சாலைகளின் எல்லை பரப்புக்கு ஏற்றாற்போல் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு வைக்கப்படுகிறது.  எத்தனை கி.மீட்டருக்கு இடையே இந்த கட்டமைப்பை வைக்கலாம் என்பது தொடர்பாக ஆய்வு செய்யப்படுகிறது. இனி வரும் காலங்களில் ஒவ்வொரு பணிகளிலும் மழை நீர் சேகரிப்புக்கும் சேர்த்தே பணிகள் மேற்கொள்ளப்படுகிறது’ என்றார்.

Related Stories: